Published : 26 May 2018 08:14 AM
Last Updated : 26 May 2018 08:14 AM

குறிப்பிட்ட நேரத்தில் சர்வ தரிசனம் திருமலையில் மீண்டும் தொடக்கம்

சாமானிய பக்தர்களுக்காக திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் தொடங்கிய ‘குறிப்பிட்ட நேரத்தில் சர்வ தரிசனம்’ திட்டம் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையானை விசேஷ நாட்கள், வார இறுதி நாட்கள் மற்றும் கோடை விடுமுறையில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசிக்க வேண்டியுள்ளது. இதனால் பக்தர்கள் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் பல மணி நேரம் அடைக்கபடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து ‘குறிப்பிட்ட நேரத்தில் சர்வ தரிசனம் (எஸ்எஸ்டி)’ எனும் புதிய திட்டத்தை தேவஸ்தானம் கடந்த மாதம் தொடங்கியது. இதற்காக திருப்பதி, திருமலையில் பல்வேறு மையங்களை ஏற்பாடு செய்தது. இந்த மையங்களில் பக்தர்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து, தரிசன டோக்கன் பெறலாம். அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் திருமலைக்குச் சென்றால், 1 அல்லது 2 மணி நேரத்தில் சுவாமியை தரிசித்து விட்டு வெளியே வந்து விடலாம். இத்திட்டம் தொடங்கிய பின்னர், கோடை விடுமுறைக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. இதன் காரணமாக இத்திட்டத்தை கடந்த 22-ம் தேதி தேவஸ்தானம் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் இத்திட்டம் தொடங்கப்படுவதாக தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இத்திட்டம் மூலம், செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் 17,000 டோக்கன்களும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 20,000 டோக்கன்களும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 30,000 டோக்கன்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமலையில் நேற்று பக்தர்களின் குறைகளை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகர் யாதவ் கேட்டறிந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x