Published : 03 Aug 2024 02:26 PM
Last Updated : 03 Aug 2024 02:26 PM

“காங்கிரஸ் - கம்யூனிஸ்டுகளால் உருவாக்கப்பட்டது வயநாடு பேரழிவு” - பாஜக எம்பி குற்றச்சாட்டு

தேஜஸ்வி சூர்யா | கோப்புப் படம்

பெங்களூரு: கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்திருப்பது இயற்கை பேரழிவு அல்ல என்றும் அது காங்கிரஸ் -கம்யூனிஸ்டுகளால் உருவாக்கப்பட்டது என்றும் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள தேஜஸ்வி சூர்யா, “கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்திருப்பது இயற்கை பேரழிவு அல்ல. அது காங்கிரஸ் - கம்யூனிஸ்டு கட்சிகளால் உருவாக்கப்பட்டது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் சட்டவிரோத வணிகமயமாக்கல், சுரங்கம் மற்றும் குவாரி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்த எச்சரிக்கைகளை கேரள அரசு குறிப்பாக கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்தன. இதன் காரணமாகவே இந்தப் பேரழிவு உருவாக்கப்பட்டது.

எனவே, வயநாட்டில் நடந்தது இயற்கைப் பேரிடர் அல்ல. இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு. நான் இதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன். நான் மட்டுமல்ல, மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் அமைப்பு குறித்து நன்கு அறிந்த சூழலியல் நிபுணர்களான மாதவ் காட்கில் போன்றவர்கள் கேரளாவில் நடந்திருப்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்று மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர்.

2000 ஆம் ஆண்டு தொடங்கி இந்த ஆண்டின் ஜனவரி வரை, பல குழு அறிக்கைகள், அரசு அமைப்புகள், அறிவியல் அமைப்புகள், ஐஐடி டெல்லி ஆகியவை மேற்கு தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களில் நடக்கும் சட்டவிரோத வணிகமயமாக்கல், சுரங்கம் மற்றும் குவாரி நடவடிக்கைகளுக்கு எதிராக கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

இவை அனைத்தையும் காங்கிரஸ் கட்சி நிராகரித்தது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக கேரளாவில் ஆட்சியில் இருக்கும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசோ அல்லது இடது ஜனநாயக முன்னணி அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வயநாட்டில் உண்மையில் என்ன தவறு நடந்தது என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்து அனைத்து அறிவியல் அமைப்புகளையும் ஊடக நிறுவனங்களையும் தடை செய்ய கம்யூனிஸ்ட் அரசாங்கம் விரும்புகிறது. இதுதான் நிதர்சனம். இன்று நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழந்துள்ள இந்த நேரத்தில், உண்மையில் என்ன தவறு நடந்தது என்பதைப் புரிந்துகொள்வதற்குப் பதிலாக, விஷயத்தின் மூலத்துக்குச் சென்று, அதை அறிவியல் பூர்வமாகத் தீர்க்க முயற்சிப்பதை, கம்யூனிஸ்ட் அரசாங்கம் தடை செய்ய விரும்புகிறது.

அனைத்து அறிவியல் அமைப்புகளும், ஊடக நிறுவனங்களும் வந்து, வயநாட்டில் உண்மையில் என்ன தவறு நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது மனிதனால் உருவாக்கப்பட்ட, கம்யூனிஸ்ட்-காங்கிரஸால் உருவாக்கப்பட்ட பேரழிவு” என குற்றம் சாட்டினார்.

தொடரும் தேடும் பணி: கேரளாவின் வயநாட்டில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நடைபெற்று வருகிறது. பலர் இன்னும் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 340-ஐ கடந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x