Published : 03 Aug 2024 05:06 AM
Last Updated : 03 Aug 2024 05:06 AM
திருவனந்தபுரம்: கேரளாவின் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ளது. நாளை வரை (ஆகஸ்ட் 4) அந்த 4 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவின் வயநாட்டில் கடந்த 30-ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 3 கிராமங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த பயங்கர நிலச்சரிவால் வீடுகள் மண்ணில் புதைந்து 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கேரளாவின் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: கேரள மாநிலத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஆகஸ்ட் 3) முதல் நாளை வரை 7 முதல் 11 செ.மீ. வரையிலான கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அங்கு ஆகஸ்ட்4-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும். அங்கு 64.5 மில்லிமீட்டர் முதல் 115.5 மில்லிமீட்டர் வரை மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: கேரளாவிலும், லட்சத்தீவிலும் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை கனமழை இருக்க வாய்ப்புள்ளது. வட கேரள கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 35 கிலோமீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கேரளாவின் 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT