Published : 03 Aug 2024 06:25 AM
Last Updated : 03 Aug 2024 06:25 AM

ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் இறந்த வழக்கு: சிபிஐ விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரை தளத்தில் வெள்ளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் இறந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

டெல்லி ராஜேந்திரா நகர் பகுதியில் ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. டெல்லியில் கடந்த 27-ம் தேதி மாலை பெய்த கனமழை காரணமாக இப்பயிற்சி மையத்தின் தரை தளத்தில் வெள்ளம் புகுந்தது.

சுமார் 20 மாணவர்கள் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில் 17 பேர் மட்டுமே உரிய நேரத்தில் மீட்கப்பட்டனர். தெலங்கானாவை சேர்ந்த தன்யா சோனி, உ.பி.யைசேர்ந்த ஷ்ரேயா யாதவ், கேரளாவை சேர்ந்த நவீன் டால்வின் ஆகிய 3 பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உரிய நடவடிக்கை கோரி அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

7 பேர் கைது: இந்த வழக்கில் பயிற்சி மைய உரிமையாளர் அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் உள்ளிட்ட 7 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் உயர் நிலை விசாரணை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இடைக்கால தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சம்பவத்துக்கு காரணமான மற்றவர்கள் மீதுஇன்னும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நீபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டனர்.

விசாரணையில் பொதுமக்க ளுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகவும், சம்பவங்களின் தீவிரத்தன்மை மற்றும் அரசுஊழியர்கள் ஊழலில் ஈடுபட்டதற்கான சாத்தியக்கூறுகள் காரண மாகவும் இந்த முடிவுக்கு வந்ததாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் சிபிஐ விசாரணையை கண்காணிக்க மூத்த அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு மத்தியஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கட்டுமான விதிமீறல் தொடர்பான 13 ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு மாநகராட்சி சீல் வைத்தது. அப்பகுதி பொறியாளர்கள் இருவரை இடைநீக்கம் செய்தது. ராஜேந்திரா நகர் பகுதியில் மழைநீர் தேங்குவதற்கு காரணமான ஆக்கிரமிப்புகளை அகற்றியது. இறந்த 3 மாணவர்களின் பெயரில் 4 நூலகங்கள் ஏற்படுத்த அதிகாரிகளுக்கு மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x