Published : 03 Aug 2024 05:11 AM
Last Updated : 03 Aug 2024 05:11 AM
புதுடெல்லி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல், வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனிதஉரிமை ஆணையம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு பின்னர் முடித்து வைக்கப்பட்டது. இதை எதிர்த்தும், இந்த வழக்கை மீண்டும்விசாரிக்க வலியுறுத்தியும் மதுரையைசேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
உயர் நீதிமன்றம் உத்தரவு: இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வு கடந்த ஜூலை 15-ம்தேதி பிறப்பித்த உத்தரவில் கூறிய தாவது:
தூத்துக்குடியில் மக்கள் அமைதியாக நடத்திய 100 நாள் போராட்டத்தில் எந்த சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால்,துப்பாக்கிச்சூடு சம்பவம் திட்டமிட்டுநடத்தப்பட்டுள்ளது. சுதந்திரமான அமைப்பான சிபிஐ, 13 அப்பாவிகள் பலியான இந்த வழக்கில் ஒரே ஒரு அதிகாரி மீது மட்டுமே குற்றம் சாட்டியுள்ளது.
இது சிபிஐயின் செயலற்ற தன்மையை காட்டுகிறது. அதற்காக ஒட்டுமொத்த சிபிஐ அதிகாரிகளையும் குறைகூற வில்லை. செல்வாக்கு மிக்க நபருக்காகவே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடந்த 2018-ம் ஆண்டுக்கு முன்பு 2 ஆண்டு, பின்பு 2 ஆண்டு என, இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை, வருவாய் துறையின் 21 அதிகாரிகளின் 4 ஆண்டு சொத்து விவரங்களை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து 17காவல் துறை அதிகாரிகள் கூட்டாகஉச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிடி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், ‘‘இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ,தமிழக அதிகாரிகள் மீது எந்தகுற்றச்சாட்டையும் முன்வைக்க வில்லை. ஆனால், இந்த வழக்கை மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் 4 ஆண்டு சொத்து பட்டியலை தாக்கல் செய்ய உத்தர விட்டது தேவையற்றது’’ என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தனர். இதுதொடர்பாக எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, விசாரணையை தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT