Published : 19 Aug 2014 12:00 AM
Last Updated : 19 Aug 2014 12:00 AM

பிஹாரில் 13 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிப்பு: உத்தரப் பிரதேச மாநில நதிகளில் வெள்ளப்பெருக்கு

பிஹாரில் 13 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 5 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ரப்தி, சாரதா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பிஹாரின் பாட்னா, கோபால்கஞ்ச், கிழக்கு சம்பாரன், ஷேக்புரா உள்ளிட்ட 13 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த மாவட்டங்களுக்கு மேற்குவங்கத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அங்கு ஏற்கெனவே மீட்புப் படையை சேர்ந்த 8 குழுக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

பேரிடர் மேலாண்மை துறை சிறப்புச் செயலாளர் அனிருத் குமார் கூறும்போது, “13 மாவட்டங்களின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. தர்பாங்கா, நளந்தா, சுபால், சஹாரஸா, நவாடா, ககாரியா, முஸாபர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைநீர்

தேங்கியுள்ளது. 5 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி கடந்த 2 நாட்களில் 2 பேர் உயிரிழந்தனர். எனினும், தற்போது வானிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கோசி, கந்தக், சோனே நதிகளில் நீர்வரத்து சற்று குறைந்துள்ளது” என்றார்.

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து மீட்கப்படும் மக்கள், நிவாரண முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 38 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 75 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மக்களை அழைத்து வருவதற்கு 487 படகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

உ.பி. நதிகளில் வெள்ளம்

உத்தரப் பிரதேசத்தில் பஹ் ராய்ச், ஷ்ராவஸ்தி, பலராம்பூர், லக்கிம்பூர் மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. காக்ரா, ரப்தி, சாரதா நதிகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தயார் நிலையில் இருக்குமாறு ராணுவத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 73 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 17 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். நிவாரணப் பணிகளுக்கு ரூ. 51 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கருணைத்தொகை வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x