Published : 02 Aug 2024 06:19 PM
Last Updated : 02 Aug 2024 06:19 PM

டெல்லி அரசு தங்கும் விடுதியில் ஒரே மாதத்தில் 14 பேர் உயிரிழப்பு: நீதி விசாரணைக்கு உத்தரவு

டெல்லி அமைச்சர் அதிஷி

புதுடெல்லி: டெல்லியில் உள்ள அரசு தங்கும் விடுதியான ஆஷா கிரண் தங்கும் விடுதியில் கடந்த ஜூலை மாதம் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து நீதித் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, அம்மாநில அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ரோஹினி பகுதியில் டெல்லி அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் ஆஷா கிரண் தங்கும் விடுதியில் பல்வேறு மர்ம மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை 25 பேர் உயிரிழந்திருப்பதாகவும், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும் (6 ஆண்கள், 8 பெண்கள்) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆஷா கிரண் தங்கும் விடுதி சார்பில் அரசுக்கு தெரிவிக்கப்பட்ட தகவலில், சுயநினைவின்மை, லேசான காய்ச்சல், வயிற்றுப் போக்கு, வாந்தி ஆகியவை உயிரிழப்புக்கு காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து நீதித் துறை விசாரணை மேற்கொள்ளப்படும் என்று டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி தலைவருமான அதிஷி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "உயிரிழந்தவர்களின் பிரதேச பரிசோதனை அறிக்கைக்காக அரசு காத்திருக்கிறது. அந்த அறிக்கை கிடைத்த 24 மணி நேரத்துக்குள் நீதித்துறை விசாரணை அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும். அதனை அடுத்து, அறிக்கையின் அடிப்படையில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஜூலையில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவர் குழந்தை. இந்தச் சம்பவம் மிகவும் முக்கியமானது என்பதால் நீதித் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்ற உத்தரவாதத்தை டெல்லி மக்களுக்கு அளிக்க விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, "ஆஷா கிரண் தங்கும் விடுதி உட்பட டெல்லி அரசால் நடத்தப்படும் அனைத்து தங்குமிடங்கள் குறித்தும் விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த மரணங்களுக்கு பொறுப்பாளிகள் யார் யார் என்பதை ஒரு வாரத்தில் முடிவு செய்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா, ஆஷா கிரண் தங்கும் விடுதிக்கு இன்று (ஆக.2) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெல்லி அரசால் நடத்தப்படும் இந்த விடுதியில் உயிரிழந்தவர்கள் அனைவரும் அப்பாவி மக்கள். இந்த விடுதியில் 250 பேர் வரை மட்டுமே தங்க முடியும். ஆனால், இங்கு 450 பேர் தங்கி உள்ளனர். அவர்களுக்கு முறையான உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. உயிரிழந்த பெண்களில் பெரும்பாலானவர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். அரசின் அலட்சியம் காரணமாகவே இத்தகைய உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன. இதற்கு யார் பொறுப்பு என்பதை அமைச்சர் அதிஷி தெரிவிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x