Last Updated : 02 Aug, 2024 04:01 PM

 

Published : 02 Aug 2024 04:01 PM
Last Updated : 02 Aug 2024 04:01 PM

தரவு பாதுகாப்பு ஆணைய விதிமுறைகள் தயாரிப்பில் மத்திய அரசு: மக்களவையில் அமைச்சர் ஜிதின் பிரசாதா தகவல்

புதுடெல்லி: தரவு பாதுகாப்பு ஆணையத்துக்கான விதிமுறைகள் தயாரிப்பில் உள்ளதாக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு பதிலாக இதனை தெரிவித்தார்.

இதுகுறித்து தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்பியான கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா அளித்த எழுத்துபூர்வப் பதிலில், “டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் 2023(டிபிடிபி) நாடாளுமன்றத்தில் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்திய குடியரசுத் தலைவர் 2023 ஆகஸ்ட் 11 அன்று இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார்.

மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் இந்த சட்டத்துக்கான விதிமுறைகளை உருவாக்கும் செயல்முறையைத் தொடங்கியிருக்கிறது. டிபிடிபி சட்டத்தின் கீழ் விதிமுறைகள் அறிவிக்கை செய்யப்பட்ட பிறகு, தரவுப் பாதுகாப்பு ஆணையம் அமைப்பது அடுத்த கட்ட முக்கியமான நகர்வாக அமையும்.

மத்திய அரசு தகவல் தொழில் நுட்ப சட்டம் 43 ஏ பிரிவு 2011 விதிகளின் கீழ் டிஜிட்டல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும், நடைமுறைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த விதிகளின்படி, அனைத்து நிறுவனங்களும் உணர்திறன் மற்றும் தனிப்பட்ட தரவுகள், தகவல்களை நியாயமான பாதுகாப்பு நடைமுறைகளின்படி சேமிக்க வேண்டும்.

தரவுப் பாதுகாப்பில் வரம்பு மீறல் இருந்தால், அங்கீகரிக்கப்பட்ட விசாரணை அமைப்பு கேட்கும். அப்போது, ஆவணப்படுத்தப்பட்ட தகவல் பாதுகாப்புத் திட்டம் மற்றும் கொள்கைகளின்படி தாங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தியதாக அந்த நிறுவனம் அல்லது அதன் பிரதிநிதி நிரூபிக்க வேண்டும்.

தவிர, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் ஆகியவற்றை பிப்ரவரி 25, 2021 அன்று அறிவித்தது.

அவை 28.10.2022 மற்றும் 6-4-2023 ஆகிய தேதிகளில் திருத்தம் செய்யப்பட்டன. ஐ.டி. விதிகள் 2021, எண் 3(1)பி-ன் கீழ் தடை செய்யப்பட்ட எந்தத் தகவலையும் பகிர்தல், பதிவேற்றுதல், அனுப்புதல் போன்றவற்றை அனுமதிக்கக்கூடாது. விதி 3(1)(பி)(வி) மற்றும் (vi) ஐடி விதிகள், 2021-ன் கீழ், மற்றொரு நபரைப் போல ஆள்மாறாட்டம் செய்வது மற்றும் தவறான தகவல்களை பகிர்வதை தடுக்கிறது.

ஐ.டி சட்டம் 2021-ன் விதிகள் 3(1) (ஐ)-ன்படி இணைய பாதுகாப்புக்கு சவால் விடும் சம்பவங்கள் பற்றி இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் அமைப்பிடம் புகார்களை அளிக்கவும், அது தொடர்பான தகவல்களை பகிரவும் வழி வகை செய்கிறது.

ஐ.டி சட்டம் 2021-ன் விதிகள் 3(1)(பி) -ன் கீழ் தடைசெய்யப்பட்ட வகைகளுக்குள் வரும் எந்த தகவலும் இடைநிலை தளதில் இருக்கும் பட்சத்தில், பயனாளர் அந்த இடைநிலை தளத்தின் குறை தீர்க்கும் அலுவலர்களிடம் கோரிக்கை வைக்கலாம். இப்படிப்பட்ட புகார்கள் பெறப்படும் பட்சத்தில் பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் 2021 ஐடி விதிகளின் விதி 3(2)ன் கீழ் விரைவாக செயல்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஐ.டி. சட்ட விதிகள் 3ஏ இன்படி அரசாங்கம், குறைதீர்க்கும் மேல் முறையீட்டு கமிட்டியையும் உருவாக்கியுள்ளது. இதன் படி குறை தீர்க்கும் அலுவலர்களின் நடவடிக்கையில் திருப்தி அடையாத பயனர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள், அந்த முடிவுக்கு எதிராக www.gac.gov.in என்ற தளம் மூலம் மேல்முறையீடு செய்ய முடியும். என்று இணை அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி, சப்தகிரி சங்கர் உலாகா, ஆண்டோ ஆன்டனி, அபிஷேக் பானர்ஜி ஆகியோர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதில், ‘டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு (DPDP) சட்டம், 2023 இன் கீழ் தரவு பாதுகாப்பு ஆணையத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளதா?. அப்படியானால், அதன் விவரங்கள்; இல்லையெனில், அதற்கான காரணங்கள்’ எனக் கேள்வி எழுப்பிருந்தனர்.

இத்துடன் கனிமொழி உள்ளிட்ட மக்களவை எம்பிக்கள், ‘டீப் ஃபேக்ஸ் போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களால் முன்வைக்கப்படும் தனித்துவமான சவால்களை எதிர்கொள்ளும் திட்டத்துடன் தரவு பாதுகாப்பு ஆணையம் இல்லை. இந்நிலையில் தரவு பாதுகாப்பு மற்றும் தரவு தனியுரிமை தொடர்பான சிக்கல்களைச் சமாளிக்க அரசாங்கம் ஏதேனும் திட்டங்களை முன்மொழிகிறதா?’ ஆகிய கேள்வியையும் எழுப்பினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x