Published : 02 Aug 2024 03:34 PM
Last Updated : 02 Aug 2024 03:34 PM
புதுடெல்லி: வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை நாளை (ஆகஸ்ட் 3) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: புதுடெல்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் ஆகஸ்ட் 3, 2024 அன்று காலை வேளாண் பொருளாதார வல்லுநர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுவார்.
வேளாண் பொருளியலாளர்களின் சர்வதேச சங்கம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பாடு செய்யும் இந்த மாநாடு, 2024 ஆகஸ்ட் 2 முதல் 7 வரை நடைபெறும். 65 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள், "நிலையான வேளாண்-உணவு முறைகளை நோக்கிய மாற்றம் என்பதாகும்". பருவநிலை மாற்றம், இயற்கை வள சீரழிவு, அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகள் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள நிலையான விவசாயத்திற்கான அவசர தேவையை சமாளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாடு உலகளாவிய வேளாண் சவால்களுக்கு இந்தியாவின் செயலூக்கம் நிறைந்த அணுகுமுறையை முன்னிலைப்படுத்துவதுடன், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கொள்கையில் நாட்டின் முன்னேற்றங்களையும் வெளிப்படுத்தும்.
ஐசிஏசி 2024 இளம் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முன்னணி தொழில் வல்லுநர்களுக்கு உலகளாவிய சகாக்களுடன் தங்கள் பணி மற்றும் கட்டமைப்பை முன்வைக்க ஒரு தளமாக செயல்படும். ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல், தேசிய மற்றும் உலகளாவிய அளவில் கொள்கை வகுப்பதில் செல்வாக்கு செலுத்துதல் மற்றும் டிஜிட்டல் விவசாயம் மற்றும் நிலையான வேளாண்-உணவு அமைப்புகளில் முன்னேற்றங்கள் உள்ளிட்ட இந்தியாவின் விவசாய முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாட்டில் 75 நாடுகளைச் சேர்ந்த 1,000 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment