Published : 02 Aug 2024 12:14 PM
Last Updated : 02 Aug 2024 12:14 PM
புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் 2 நாள் ஆளுநர்கள் மாநாடு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று தொடங்குகிறது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் இரண்டு நாள் ஆளுநர்கள் மாநாடு இன்று முதல் ராஷ்டிரபதி பவனில் தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் தலைமையில் நடைபெறும் முதல் ஆளுநர்கள் மாநாடு இதுவாகும்.
இந்த மாநாட்டில் அனைத்து மாநில ஆளுநர்களும் கலந்து கொள்கிறார்கள். குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, தர்மேந்திர பிரதான், சிவராஜ் சிங் சவுகான், அஷ்வினி வைஷ்ணவ், டாக்டர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, பிரதமர் அலுவலகம், அமைச்சரவை செயலகம், உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.
இந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் தொடர்பாக குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டள்ள அறிவிப்பில், "மூன்று குற்றவியல் சட்டங்களை செயல்படுத்துவது, உயர் கல்வியில் சீர்திருத்தங்கள், பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம், பழங்குடியினர் பகுதிகள், ஆர்வமுள்ள மாவட்டங்கள் மற்றும் தொகுதிகள் மற்றும் எல்லைப் பகுதிகள் போன்ற கவனம் செலுத்தும் பகுதிகளின் வளர்ச்சி ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், ‘எனது இந்தியா’, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ மற்றும் ‘அம்மாவுடன் ஒரு மரக்கன்று’ போன்ற பிரச்சாரங்களிலும், இயற்கை விவசாயத்திலும் ஆளுநர்களின் பங்கு; பொது இணைப்பை மேம்படுத்துதல்; மற்றும் மாநிலங்கள் மற்றும் பல்வேறு மத்திய நிறுவனங்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பில் ஆளுநர்களின் பங்கு ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
பல்வேறு குழுக்களாகப் பிரிந்து ஆளுநர்கள் இது குறித்து விவாதிப்பார்கள். இறுதி அமர்வில், இந்தக் குழுக்கள் தங்களது யோசனைகள் குறித்து குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பிற பங்கேற்பாளர்கள் முன் விளக்கமளிக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்றே தலைநகருக்கு வருகை தந்த ஆளுநர்கள், தங்கள் இணையுடன் குடியரசுத் தலைவரை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT