Published : 01 Aug 2024 07:17 PM
Last Updated : 01 Aug 2024 07:17 PM

வியட்நாம் பிரதமர் உடன் பிரதமர் மோடி பேச்சு: பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

புதுடெல்லி: வியட்நாம் பிரதமர் பாம் மின் சின் உடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையே விவசாயம், சட்டம், மருந்து உள்பட பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்தியா வந்துள்ள வியட்நாம் பிரதமர் பாம் மின் சின், பிரதமர் நரேந்திர மோடியை இன்று (ஆக. 1) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு தலைவர்களும் வியட்நாமின் Nha Trang இல் உள்ள தொலைத்தொடர்பு பல்கலைக்கழகத்தில் ராணுவ மென்பொருள் பூங்காவை திறந்து வைத்தனர். இது இந்தியா மற்றும் வியட்நாம் இடையேயான கூட்டுத் திட்டமாகும். இந்த திட்டத்திற்காக இந்தியா ஐந்து மில்லியன் டாலர்களை மானிய உதவியாக வழங்கியுள்ளது.

இதனையடுத்து, சுங்க திறன் மேம்பாடு, விவசாய ஆராய்ச்சி, கல்வி, கடல்சார் பாரம்பரியம், மருத்துவ ஆலை மற்றும் சட்டத் துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரசார் பாரதி மற்றும் வாய்ஸ் ஆஃப் வியட்நாம் இடையே வானொலி மற்றும் தொலைக்காட்சியில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில், "இந்தியா - வியட்நாம் உறவு விரிவடைந்து ஆழமடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், உறவுகளுக்கு விரிவான கூட்டாண்மை வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இருதரப்பு வர்த்தகம் 85 சதவீதம் உயர்ந்துள்ளது. இரு நாட்டு மக்களையும் ஆன்மீக மட்டத்தில் இணைத்துள்ள பௌத்தம் நமது பகிரப்பட்ட பாரம்பரியமாக உள்ளது. இந்தியாவில் உள்ள புத்த ஆன்மிக தளங்களைத் தரிசிக்க வியட்நாம் மக்களை அழைக்கிறேன்.

வியட்நாம் இளைஞர்களும் நாளந்தா பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இந்தியாவின் கிழக்கு கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் பார்வையில், வியட்நாம் இந்தியாவின் முக்கியமான பங்காளியாக உள்ளது.

இலவச, திறந்த, விதிகள் அடிப்படையிலான மற்றும் வளமான இந்தோ-பசிபிக்கிற்கான இந்தியா-வியட்நாம் ஒத்துழைப்பு தொடரும். இன்றைய கலந்துரையாடலில், பரஸ்பர ஒத்துழைப்பின் அனைத்து பகுதிகள் குறித்தும் இருவரும் விரிவாக விவாதித்தோம். எதிர்காலத்திற்கான திட்டங்களைத் தயாரிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

வளர்ச்சி அடைந்த இந்தியா 2047 தொலைநோக்கு மற்றும் வியட்நாமின் 2045 தொலைநோக்கு ஆகியவை காரணமாக இரு நாடுகளிலும் வளர்ச்சி வேகம் பெற்றுள்ளது. இது பரஸ்பர ஒத்துழைப்பின் பல புதிய பகுதிகளைத் திறக்கிறது. எனவே, இன்று இரு தரப்பினரும் விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த புதிய செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.

பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்புக்காக புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 300 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தம் வியட்நாமின் கடல் பாதுகாப்பை பலப்படுத்தும். பயங்கரவாதம் மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்று இரு தரப்பும் முடிவு செய்துள்ளது" என குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் இரவு இந்தியா வந்த வியட்நாம் பிரதமர் பாம் மின் சின்-ஐ, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த வியட்நாம் பிரதமருக்கு அரசு முறைப்படி சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் அவரை பிரதமர் மோடி வரவேற்றார். குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆகியோரையும் வியட்நாம் பிரதமர் பாம் மின் சின் இன்று சந்தித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x