Published : 01 Aug 2024 08:06 PM
Last Updated : 01 Aug 2024 08:06 PM
வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 1500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் ஏராளமான மக்கள் மண்ணில் புதைந்தனர். இதைத் தொடர்ந்து தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், கேரள போலீஸார், தீயணைப்பு படையினர் ஆகியோருடன் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படை வீரர்களும் களமிறங்கி தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்றன. அப்போது, மண்ணில் புதைந்து உயிரிழந்த நிலையில் ஏராளமான சடலங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில், மூன்றாம் நாளான புதன்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 200-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
வயநாடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள தரவுகளில், இதுவரை 167 சடலங்களின் சட்ட நடைமுறைகள் முடிக்கப்பட்டுள்ளன. இதில் 77 ஆண்கள், 67 பெண்கள் மற்றும் 22 குழந்தைகள் உட்பட 96 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 166 சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 75 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேபோல் சாலியாற்றில் மட்டும் 144 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
தேசிய பேரிடராக அறிவிக்க கோரிக்கை: வயநாடு நிலச்சரிவு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “நிலச்சரிவில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை மீட்பதே எங்கள் கவனம். மீட்புப்பணியில் ராணுவத்தின் முயற்சியை பாராட்டுகிறேன். நிலச்சரிவு உண்டான இடங்களில் மண்ணுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்பதற்கு இயந்திரங்களை கொண்டு வருவது கடினமாக இருந்தது. அதேபோல் ராணுவம் அமைத்து வரும் பெய்லி பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துவிட்டது.
சாலியாற்றில் அதிக சடலங்கள் கிடைத்துள்ளன. அதனால், சாலியாற்றில் தொடர்ந்து சடலங்களை தேடும்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதேநேரம், நிலச்சரிவில் மீட்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். முந்தைய பேரிடர்களில் நாங்கள் செய்தது போல், மக்களின் புனர்வாழ்வுக்கான பணிகள் விரைவில் செய்யப்படும்.
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கையை ஏற்கெனவே மத்திய அரசிடம் வைத்துள்ளோம். ஆனால், இன்னும் அறிவிக்கவில்லை. இதனை அறிவிக்க, எது தடையாக இருக்கும் என்பதை மத்திய அரசு தான் சொல்ல வேண்டும்." என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து மேப்பாடி, சூரல்மலா, முண்டக்கை என நிலச்சரிவு உண்டான இடங்களில் மீட்புப்பணிகளையும் முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு செய்தார்.
கட்டிமுடிக்கப்பட்ட பாலம்: முண்டக்கை பகுதியில் நேற்று பெய்த கனமழையால் ராணுவத்தினர் அமைத்து வந்த தற்காலிக இரும்புபாலத்தின் பணி கைவிடப்பட்டது. இன்று மழை குறைந்துள்ளதை அடுத்து ராணுவம் மீண்டும் பாலத்தின் கட்டுமான பணியை தொடங்கிய நிலையில் தற்போது பாலம் முழுவதுமாக கட்டிமுடிக்கப்பட்டது. மெட்ராஸ் ரெஜின்மெண்ட்டை சேர்ந்த ராணுவ பொறியாளர்கள் உட்பட, 123 பேர் இணைந்து இந்த மேம்பாலத்தை அமைத்தனர். நிலச்சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்ட முண்டக்கை பகுதியை இணைக்க சாலைகள், பாலம் அனைத்தும் அடியோடு மண்ணில் புதைந்த நிலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த இரும்பு பாலம் முண்டக்கை பகுதியில் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல், பிரியங்கா ஆய்வு: நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை வயநாடு தொகுதி எம்பியாக வென்ற ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். தொடர்ந்து மேப்பாடி, சூரல்மலா, முண்டக்கை என நிலச்சரிவு உண்டான இடங்களில் மீட்புப்பணிகளையும் ஆய்வு செய்தனர். “வயநாட்டின் சோகக் காட்சிகள் என் இதயத்தில் வேதனையை உண்டாக்குகிறது. இந்த கடினமான காலங்களில் நானும் பிரியங்காவும் வயநாடு மக்களுடன் நிற்போம். நிவாரணம், மீட்பு மற்றும் மறுவாழ்வு முயற்சிகளை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து, தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதிசெய்கிறோம். யுடிஎப் கூட்டணி அனைத்து சாத்தியமான ஆதரவையும் வழங்க உறுதிபூண்டுள்ளது. மீண்டும் மீண்டும் நிலச்சரிவுகள் மற்றும் இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது மிகவும் கவலை அளிக்கிறது. ஒரு விரிவான செயல் திட்டம் உடனடியாக தேவை" என்று ராகுல் காந்தி தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை. இந்தத் துயரமான நேரத்தில் மக்களுடம் இருப்பது அவசியம். ஒட்டுமொத்த மக்களும் வயநாடு மக்களுக்கு உதவ வேண்டும். என் தந்தையை இழந்தபோது எவ்வளவு துக்கமடைந்தேனோ அதே துக்கத்தில்தான் இப்போது இருக்கிறேன். இந்த துயரமான நேரத்தில் மக்களுடன் இருப்பது மிகவும் அவசியம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வந்து சேருவதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
மீட்புப் பணியில் இறங்கியவரும் உயிரிழப்பு: வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட முன்னாள் ஆசிரியரான மேத்யூ குளந்திங்கல் (58) அடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார். கடந்த 30-ம் தேதி விளாங்காடு பகுதியில் முதல் நிலச்சரிவு ஏற்பட்ட போது, மேத்யூ மற்றும் அவரின் பக்கத்து வீட்டில் உள்ள சின்சே உள்ளிட்டோர் மீட்புப் பணியில் இறங்கியுள்ளனர். ஆனால், 2வது ஏற்பட்ட நிலச்சரிவில் மேத்யூ அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
வயநாடு நிலச்சரிவின் செயற்கைக்கோள் வரைபடங்கள்: வயநாடு நிலச்சரிவை இஸ்ரோவின் ஓர் அங்கமான ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (NRSC) கார்டோசாட்-3 செயற்கைக்கோள் மற்றும் ரிசாட் செயற்கைக்கோளையும் பயன்படுத்தி இந்த புகைப்படங்களாக எடுத்துள்ளது. அதே மையம் வெளியிட்ட தகவலில், "வயநாட்டின் முண்டக்கை பகுதிக்கு மேலே உள்ள மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 1550 மீட்டர் உயரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஏறக்குறைய 86,000 சதுர மீட்டர் நிலம் சரிந்துள்ளது. குடியரசுத் தலைவர் வசிக்கும் ராஷ்டிரபதி பவனின் அளவை விட இது சுமார் ஐந்து மடங்கு அதிகம்.
இவ்வளவு பெரிய நிலத்தின் மணல் திட்டுகள் சுமார் 8 கி.மீ கீழே நோக்கி சரிந்து முண்டக்கை, சூரல்மலா போன்ற குடியிருப்பு பகுதிகளை தாண்டி சென்றுள்ளது. அதுமட்டும்மில்லாமல், நிலச்சரிவினால் உண்டான மணல்திட்டுகள் அப்பகுதியில் ஓடும் சிறிய ஆறான இருவஞ்சிபுழா ஆற்றின் பரப்பளவை வெகுவாக அதிகரித்து கீழே நோக்கி ஓடியுள்ளது. ஏற்கனவே நிலச்சரிவு உண்டான அதே இடத்தில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைப்பில் முழுமையாக பார்க்க > மேப் 1, மேப் 2
உலுக்கும் அனுபவப் பகிர்வு: வயநாடு பெருந்துயரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்தத் துயரத்தின் உண்மையான சோகத்தை வலியுடன் பகிர்கிறார் அரசு மருத்துவர் ஒருவர். உள்ளூர் மருத்துவமனை ஒன்றுக்கு உடற்கூராய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட அப்பெண் மருத்துவர், தான் இதுவரை காணாத காட்சிகளைக் கண்டிருக்கிறார். | முழுமையாக வாசிக்க > “தப்பிச் செல்ல முற்பட்டேன்!” - உடற்கூராய்வு மருத்துவர் பகிரும் வயநாடு பெருந்துயர் அனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT