Published : 01 Aug 2024 04:55 PM
Last Updated : 01 Aug 2024 04:55 PM

வயநாடு நிலச்சரிவு: மீட்புப் பணிகளில் இந்திய விமானப் படை தீவிரம்

திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவு நிலச்சரிவை அடுத்து, இந்திய விமானப் படை (ஐ.ஏ.எஃப்) மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய விமானப் படையின் போக்குவரத்து விமானங்கள், முக்கியமான தளவாட பொருட்கள் மற்றும் வெளியேற்றும் நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகித்துள்ளன. பெய்லி பாலம், நாய் படைகள், மருத்துவ உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான பிற அத்தியாவசிய உபகரணங்கள் போன்ற 53 மெட்ரிக் டன் அத்தியாவசிய பொருட்களை சி -17 விமானம் கொண்டு சென்றுள்ளது.

மேலும், ஏஎன்-32 மற்றும் சி-130 ரக போர் விமானங்கள் நிவாரணப் பொருட்களையும், பணியாளர்களையும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய விமானப் படையின் இந்த விமானங்கள் ஒட்டுமொத்தமாக, மீட்புக் குழுக்கள் மற்றும் இடம்பெயர்ந்த குடியிருப்பாளர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களை பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருநது கொண்டு செல்ல உதவியுள்ளன. சவாலான வானிலைக்கு இடையிலும் இந்திய விமானப் படை, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக பல்வேறு கடற்படை ஹெலிகாப்டர்களை விமானப்படை அனுப்பி வைத்துள்ளது. எம்ஐ-17, துருவ் அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள் (ஏஎல்எச்) ஆகியவை மீட்பு நடவடிக்கைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பரவலான மோசமான வானிலை இருந்தபோதிலும், சிக்கித் தவிக்கும் நபர்களை அருகிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் பாதுகாப்பான மண்டலங்களுக்கு வெளியேற்றுவதற்கும், ஜூலை 31 மாலை வரை அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கும் ஐ.ஏ.எஃப் விமானங்கள் தொடர்ந்து உதவுகின்றன.

மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஹெலிகாப்டர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மக்களை விமானம் மூலம் மீட்டு, அவர்களின் பாதுகாப்புக்கும் உடனடி போக்குவரத்துக்கும் உறுதி செய்துள்ளன. பேரிடரால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்திய விமானப் படை உறுதிபூண்டுள்ளது என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x