Published : 01 Aug 2024 05:43 PM
Last Updated : 01 Aug 2024 05:43 PM

இலங்கை கடற்படை தாக்குதலில் தமிழக மீனவர் உயிரிழப்பு: இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு கண்டிப்பு

ராமேசுவரம்: இலங்கை கடற்படை தாக்குதலில் தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், டெல்லியில் உள்ள இலங்கை தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது குறித்து டெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கச்சத்தீவுக்கு வடக்கே 5 கடல் மைல் தொலைவில் இலங்கை கடற்படை கப்பல் ஒன்றும் இந்திய மீன்பிடி படகு ஒன்றும் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி படகிலிருந்த நான்கு இந்திய மீனவர்களில் ஒருவர் துரதிருஷ்டவசமாக உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காணாமல் போயுள்ளார்.

மீனவர்களில் இருவர் மீட்கப்பட்டு இலங்கையிலுள்ள காங்கேசன்துறை கரைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். காணாமல் போன இந்திய மீனவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் உடனடியாக காங்கேசன்துறைக்கு விரைந்து சென்று மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், புதுடெல்லியில் உள்ள இலங்கை தூதுரக அதிகாரி இன்று வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு வரவழைக்கப்பட்டு மீனவர் உயிரிழப்பு குறித்து மத்திய அரசின் அதிர்ச்சியையும், வேதனையையும் வெளிப்படுத்தியதோடு, கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொழும்பில் உள்ள இந்திய தூதர் இந்தச் சம்பவம் குறித்து இலங்கை அரசிடம், ''மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளை மனிதாபிமானமான முறையில் கையாள வேண்டும் என்று இந்திய அரசு எப்போதும் வலியுறுத்தி வருகிறது.

அந்த வகையில் இந்திய - இலங்கை அரசுகளுக்கு இடையே நிலவும் புரிந்துணர்வுகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். மீண்டும் இத்தகைய சம்பவம் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x