Published : 01 Aug 2024 05:05 PM
Last Updated : 01 Aug 2024 05:05 PM
வயநாடு: கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை - நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ள மக்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கேரளாவில் மலைப் பிரதேசங்கள் நிறைந்த வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த 30-ம் தேதி பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை தற்போது 288 ஆக அதிகரித்துள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிப்பு நிறைந்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட மக்கள் பல்வேறு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு தொகுதியில் நின்று வெற்றிபெற்றவருமான ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் இன்று (ஆகஸ்ட் 1) வயநாடு வந்தார்.
நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட சூரல்மாலா உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற அவர்கள், அங்கு நிலைமையை ஆய்வு செய்தனர். ரெயின் கோட் அணிந்தபடி ஆற்றின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலத்தின் வழியாக சென்ற அவர்கள், அங்கும் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டனர்.
மேலும், மேப்படி என்ற இடத்தில் நிவாரண முகாமாக மாற்றப்பட்டுள்ள செயின்ட் ஜோசப் பள்ளிக்குச் சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் வருகையை ஒட்டி அங்கு காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் கூடி இருந்தனர். காவல் துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT