Published : 01 Aug 2024 04:15 PM
Last Updated : 01 Aug 2024 04:15 PM

வயநாடு நிலச்சரிவு | பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் மட்டுமே உதவிகள் வழங்க முடியும்: கேரள முதல்வர்

திருவனந்தபுரம்: வயநாடு மாவட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் மட்டுமே உதவிகள் வழங்க முடியும் என்று கேரள முதல்வர் பினரயி விஜயன் தெரிவித்துள்ளார்.

வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280ஐ கடந்துள்ள நிலையில், முதல்வர் பினரயி விஜயன் தலைமையில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து பினரயி விஜயன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் தனியுரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், அவர்கள் குடும்பம் குடும்பமாக தங்க வைக்கப்படுவார்கள். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

முகாம்களின் அமைதியைப் பாதுகாக்க, முகாம்களுக்குள் வெளிநபர்கள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களை பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு மையங்கள் அமைக்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்கும் அவர்களிடம் நேர்காணல்கள் எடுப்பதற்கும் ஒரு பொதுவான இடம் ஒதுக்கப்படும். முகாம்களுக்குள் கேமராக்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

நிவாரண முகாம்களுக்கு உணவு, உடை மற்றும் பிற பொருட்களை வெளியில் இருந்து வழங்க அரசு அனுமதிக்காது. வெளியில் இருந்து வரும் அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலமே வழங்கப்பட வேண்டும்.

இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக்கு முன்னுரிமை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. அவர்களின் படிப்பு தடைபட இடம் கொடுக்க மாட்டோம். எனவே, ஆசிரியர்களை முகாம்களுக்கு அனுப்ப உள்ளோம். மாணவர்களின் தற்போதைய படிப்புகளுக்கு ஏற்ப அவர்களை வகைப்படுத்தி அவர்களுக்கு கல்வி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த கல்வித் துறையை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

எந்த ஒரு தொற்றுநோயும் ஏற்படா வண்ணம் தடுப்பதே அரசின் முன்னுரிமை. இந்த நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் புதைந்துவிட்டன. சடலங்களை அப்புறப்படுத்த சுகாதாரத்துறை ஒரு நெறிமுறையை வகுத்துள்ளது.

இருவழஞ்சிபுழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்ததால் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் இருந்தது. எனினும், ஆற்றின் குறுக்கே தற்காலிக பாலத்தை ராணுவம் அமைத்ததை அடுத்து, எதிர் கரையில் துண்டிக்கப்பட்ட சேதமடைந்த பகுதிகளுக்கு செல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை நிறைவு செய்ய நீண்ட காலம் ஆகலாம். ஏனெனில், நிலச்சரிவு காரணமாக பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. அவற்றை அகற்றி உள்ளே யாரேனும் இருக்கிறார்களா அல்லது உடல்கள் இருக்கின்றனவா என்பதை கண்டறிய வேண்டும். பெருமளவிலான வீடுகள் மண் மற்றும் கற்பாறைகளுக்குள் புதைத்துள்ளன. எனவே, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நிறைவடைய வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம்.

நிவாரண முகாம்கள் ஒரு தற்காலிக ஏற்பாடுதான். பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கி இருப்பவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தேவையான நிதி உதவிகளை அரசு வழங்கும். மேலும், தொலைந்துபோன ஆவணங்களை மீட்டெடுக்கவும் ஒரு செயல்திட்டத்தை அரசு உருவாக்கும்.

வயநாட்டில் தேடும் பணி, மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை கண்காணிக்க அமைச்சரவை துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன், பொதுப்பணித் துறை அமைச்சர் பி.ஏ. முகமது ரியாஸ், வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன், பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஓ.ஆர். கேலு ஆகியோர் உள்ளனர்” என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x