Published : 01 Aug 2024 02:06 PM
Last Updated : 01 Aug 2024 02:06 PM

“வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்” - கேரள முதல்வர் பினராயி விஜயன்

வயநாடு: “வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கை ஏற்கனவே மத்திய அரசிடம் வைத்துள்ளோம். ஆனால், இன்னும் அறிவிக்கவில்லை. இதனை அறிவிக்க, எது தடையாக இருக்கும் என்பதை மத்திய அரசு தான் சொல்ல வேண்டும்.” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

வயநாடு நிலச்சரிவு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “இன்று அரசின் உயர்மட்ட கூட்டம் நடந்தது. அதன் பிறகு அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது. எதிர்க்கட்சி தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நிலச்சரிவில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை மீட்பதே எங்கள் கவனம். மீட்புப்பணியில் ராணுவத்தின் முயற்சியை பாராட்டுகிறேன்.

நிலச்சரிவு உண்டான இடங்களில் மண்ணுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்பதற்கு இயந்திரங்களை கொண்டு வருவது கடினமாக இருந்தது. அதேபோல் ராணுவம் அமைத்து வரும் பெய்லி பாலத்தின் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது.

சாலியாற்றில் அதிக சடலங்கள் கிடைத்துள்ளன. அதனால், சாலியாற்றில் தொடர்ந்து சடலங்களை தேடும்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதேநேரம், நிலச்சரிவில் மீட்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். முந்தைய பேரிடர்களில் நாங்கள் செய்தது போல், மக்களின் புனர்வாழ்வுக்கான பணிகள் விரைவில் செய்யப்படும்.

தொற்றுநோய் பரவுவதை தவிர்க்க வேண்டும். மனிதர்கள் மட்டுமின்றி, ஏராளமான விலங்குகளும் பேரிடரில் உயிரிழந்தன. அவற்றை எல்லாம் முறையாக புதைக்க வேண்டும். இதற்கு சில நாட்கள் ஆகும். எனவே, நிலச்சரிவு தொடர்பான மீட்புப்பணிகளை மேற்கொள்ள 4 அமைச்சர்கள், மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து இங்கேயே இருப்பர். பேரிடரில், தங்களின் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு மீண்டும் சான்றிதழ் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கையை ஏற்கெனவே மத்திய அரசிடம் வைத்துள்ளோம். ஆனால், இன்னும் அறிவிக்கவில்லை. இதனை அறிவிக்க, எது தடையாக இருக்கும் என்பதை மத்திய அரசு தான் சொல்ல வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

பலி எண்ணிக்கை: இதற்கிடையே, வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. அப்பகுதியில் மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

கட்டிமுடிக்கப்பட்ட பாலம்: முண்டக்கை பகுதியில் நேற்று பெய்த கனமழையால் ராணுவத்தினர் அமைத்து வந்த தற்காலிக இரும்புபாலத்தின் பணி கைவிடப்பட்டது. இன்று மழை குறைந்துள்ளதை அடுத்து ராணுவம் மீண்டும் பாலத்தின் கட்டுமான பணியை தொடங்கிய நிலையில் தற்போது பாலம் முழுவதுமாக கட்டிமுடிக்கப்பட்டது. மெட்ராஸ் ரெஜின்மெண்ட்டை சேர்ந்த ராணுவ பொறியாளர்கள் உட்பட, 123 பேர் இணைந்து இந்த மேம்பாலத்தை அமைத்தனர்.

நிலச்சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்ட முண்டக்கை பகுதியை இணைக்க சாலைகள், பாலம் அனைத்தும் அடியோடு மண்ணில் புதைந்த நிலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த இரும்பு பாலம் முண்டக்கை பகுதியில் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x