Published : 01 Aug 2024 01:48 PM
Last Updated : 01 Aug 2024 01:48 PM

எம்.பி. ஆவதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக குறைக்க வேண்டும்: ராகவ் சட்டா வலியுறுத்தல்

ராகவ் சட்டா | கோப்புப் படம்

புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினருக்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக குறைக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சட்டா, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ராகவ் சட்டா, அவையில் இன்று (ஆக. 1) பேசும்போது, “நமது நாடு இளமையான நாடுகளில் ஒன்று. வயதான அரசியல்வாதிகளைக் கொண்டுள்ள இளம் நாடாக நாம் இருக்கிறோம். மாறாக, இளம் அரசியல்வாதிகளைக் கொண்ட இளம் நாடாக நாம் இருக்க வேண்டும். இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபடுவதற்கு ஏற்ப நாம் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு, இந்திய எம்.பி.க்களுக்கான குறைந்தபட்ச வயதை 21 ஆகக் குறைக்குமாறு நான் அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் குறித்து சர்ச்சை: இந்தியாவில் மக்களவை உறுப்பினராக குறைந்தபட்ச வயது 25 ஆகவும், மாநிலங்களவை உறுப்பினராக குறைந்தபட்ச வயது 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி திக் விஜய் சிங், ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பேசியதை விதி 238ன் கீழ் ஒழுங்கு பிரச்சினையை எழுப்ப முயன்றார். இதனால், இருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்த விவகாரத்தை எழுப்ப தனக்கு உரிமை உள்ளது என திக் விஜய் சிங் கூற, அவைத் தலைவருக்கு எதிராக பிரச்சினையை எழுப்ப முடியாது என தன்கர் தெரிவித்தார். மேலும், உங்கள் கருத்துக்கள் அவைக் குறிப்பில் இடம்பெறாது என்றும் தன்கர் கூறினார்.

முன்னதாக, ஆர்எஸ்எஸ் குறித்து அவையில் பேசிய ஜக்தீப் தன்கர், “தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க முழு அரசியலமைப்பு உரிமையைக் கொண்ட ஒரு அமைப்பு ஆர்எஸ்எஸ் என்றும், நிகரற்ற நம்பகத்தன்மையை அது கொண்டிருக்கிறது” என்றும் கூறி இருந்தார்.

சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் பதில்: பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து 1.46 லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டுள்ளதாக மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் அஜய் தம்தா தெரிவித்தார். மக்களவையில் இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், “2014ஆம் ஆண்டில் 91,281 கிலோமீட்டர் தூரம் வாகனம் ஓட்டக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகள் இருந்தன. பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து 1.46 லட்சம் கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x