Published : 01 Aug 2024 12:48 PM
Last Updated : 01 Aug 2024 12:48 PM
புதுடெல்லி: இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் சிம்லா மற்றும் மண்டி மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 1) அதிகாலை மேகவெடிப்பு ஏற்பட்டு பெய்த கனமழை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 40 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம்லா மாவட்டத்தின் சமேஷ் என்ற கிராமத்தில் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததாகவும், 28 பேரைக் காணவில்லை என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் காந்தி தெரிவித்துள்ளார். உயிரிழந்த இருவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த கிராமத்தில் நள்ளிரவு 1 மணியளவில் மேக வெடிப்பு ஏற்பட்டதால் பெய்த கனமழையில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், இதனால் மீட்பு பணி சவாலானதாக மாறியதாகவும் மாநகர துணை காவல் ஆணையர் அனுபம் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
இதேபோல், மண்டி மாவட்டத்தில் உள்ள திக்கன் தாலுகோட் கிராமத்திற்கு அருகே ஏற்பட்ட மற்றொரு மேக வெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 9 பேர் காணவில்லை. இப்பகுதியில் சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும், சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மண்டி மாவட்ட நிர்வாகம் இந்திய விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் உதவியை நாடியுள்ளது. குலு மாவட்டத்தில் உள்ள ஜான் என்ற கிராமத்தில் ஏற்பட்ட மற்றொரு மேக வெடிப்பு சம்பவத்தில் இழப்புகள் மதிப்பிடப்பட்டு வருகின்றன.
இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஜகத் சிங் நேகி தெரிவித்துள்ளார். நான்கு மேம்பாலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் அடித்து செல்லப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை, காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படையினர் மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளதாகவும், ஆளில்லா விமானங்களின் உதவியுடன் காணாமல் போனவர்களைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனமழை காரணமாக கால்நடைகள் அதிக எண்ணிக்கையில் பலியாகியுள்ளதாகவம், ஆப்பிள் உள்ளிட்ட பயிர்கள் பெருத்த சேதமடைந்துள்ளதாகவும், நிலச்சரிவுகள் காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பல இடங்களில் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, மாநில காவல்துறை, ஊர்க்காவல் படையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு நிலைமையை நேரில் கண்காணித்து வருவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT