Published : 01 Aug 2024 11:10 AM
Last Updated : 01 Aug 2024 11:10 AM
வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. அப்பகுதியில் மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 1000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிக்கு வந்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் ஏராளமான மக்கள் மண்ணில் புதைந்தனர். இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியில், 130 பேர் உயிரிழந்ததாக தெரியவந்தது. தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், கேரள போலீஸார், தீயணைப்பு படையினர் ஆகியோருடன் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படை வீரர்களும் களமிறங்கி தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2-ம் நாளாக நேற்றும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்றன. அப்போது, மண்ணில் புதைந்து உயிரிழந்த நிலையில் ஏராளமான சடலங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 200க்கும் மேற்பட்டோரை தேடும்பணி நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைத்தனர். சூரல்மலை, முண்டக்கை பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் மட்டுமே ஏராளமானோர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
வயநாடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள தரவுகளில், இதுவரை 167 சடலங்களின் சட்ட நடைமுறைகள் முடிக்கப்பட்டுள்ளன. இதில் 77 ஆண்கள், 67 பெண்கள் மற்றும் 22 குழந்தைகள் உட்பட 96 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 166 சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 75 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் தொடங்கிய பாலம் கட்டுமானம்: முண்டக்கை பகுதியில் நேற்று பெய்த கனமழையால் ராணுவத்தினர் அமைத்து வந்த தற்காலிக இரும்புபாலத்தின் பணி கைவிடப்பட்டது. இன்று மழை குறைந்துள்ளதை அடுத்து ராணுவம் மீண்டும் பாலத்தின் கட்டுமான பணியை தொடங்கியுள்ளது. மெட்ராஸ் ரெஜின்மெண்ட்டை சேர்ந்த ராணுவ பொறியாளர்கள் உட்பட, 123 பேர் இணைந்து இந்த மேம்பாலத்தை அமைத்து வருகின்றனர்.
நிலச்சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்ட முண்டக்கை பகுதியை இணைக்க சாலைகள், பாலம் அனைத்தும் அடியோடு மண்ணில் புதைந்த நிலையில் தற்காலிக இரும்பு மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த பாலம் அமைத்தால் முண்டக்கை பகுதியில் மீட்புப் பணிகள் துரிதமாகும்.
பினராயி விஜயன் ஆய்வு: கேரள முதல்வர் பினராயி விஜயன் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்வதற்காக வயநாடு வந்துள்ளார். மேப்பாடி, சூரல்மலா மற்றும் முண்டக்கை பகுதிகளில் அவர் ஆய்வு நடத்த உள்ளார். இதேபோல் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் இன்று வயநாடு வந்துள்ளனர். சுல்தான் பத்தேரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை அவர்கள் சந்திக்க உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment