Published : 01 Aug 2024 04:52 AM
Last Updated : 01 Aug 2024 04:52 AM
புதுடெல்லி: உ.பி.இடைத்தேர்தலில் சமாஜ் வாதியும் காங்கிரஸும் இணைந்து போட்டியிட உள்ளன.
உ.பி.யில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 9 எம்எல்ஏக்கள், எம்.பி.க்களாகி உள்ளனர். சிறைதண்டனை காரணமாக சமாஜ்வாதிஎம்எல்ஏ இர்பான் சோலங்கி தகுதியிழப்புக்கு ஆளானதால் அவரது சிசாமு தொகுதி காலியானது. இந்த 10 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இது, 2027 சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதில் உ.பி.யின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதியும் காங்கிரஸும் இணைந்து போட்டியிடுகின்றன.
இதுகுறித்து ‘இந்து தமிழ்திசை’ நாளிதழிடம் சமாஜ்வாதி நிர்வாகிகள் வட்டாரங்கள் கூறும்போது, “பத்து தொகுதிகளில் காங்கிரஸுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கி, 7-ல் நாங்கள் போட்டியிட உள்ளோம். இது தொடர்பான அறிவிப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு வெளியாகும். மக்களவைத் தேர்தலில் இந்தக்கூட்டணிக்கு நல்ல பலன் கிடைத்ததால் 2027 சட்டப்பேரவை தேர்தலிலும் தொடர வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தன.
காலியாக உள்ள 10 தொகுதிகளில் 5 சமாஜ்வாதி கட்சிக்கானது. இதில் அகிலேஷ் ராஜினாமா செய்த கர்ஹால் தொகுதியும் உள்ளது. பைசாபாத் சமாஜ்வாதி எம்.பி. அவ்தேஷ் பிரசாத் ராஜினாமா செய்த மில்கிபூரும் உள்ளது. இவ்விரண்டு தொகுதிகளிலும் பாஜக- சமாஜ்வாதி இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீதமுள்ள 5 தொகுதிகளில் பாஜக மூன்றிலும் அதன் கூட்டணிக் கட்சிகளான நிஷாத் கட்சியும், ராஷ்டிரிய லோக் தளமும் தலா ஒரு தொகுதியிலும் வென்றிருந்தன. எனினும் ஐந்திலும் போட்டியிட விரும்பும் பாஜகவுக்கு கூட்டணிக் கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் ஐந்தில் தமக்கும் பங்கு வேண்டும் என அப்னா தளம் கட்சியும் கேட்கிறது.
இந்நிலையில் 10 தொகுதிகளுக்கும் மாநில அமைச்சர்கள் தலைமையில் பாஜக 10 குழுக்களை அமைத்து களம் இறக்கியுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இதுவரை 3 ஆலோசனைக் கூட்டங்களும் நடந்துள்ளன. உ.பி.யில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி செய்யும் பாஜகவுக்கு மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
இதனால் உ.பி. பாஜகவில் உட்கட்சி பூசல் எழுந்துள்ள நிலையில் இடைத்தேர்தல் வெற்றி முதல்வர் யோகிக்கு அவசியமாகி உள்ளது. நகீனா தொகுதி எம்.பி. சந்திரசேகர ஆசாத்தின் கட்சியும் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT