Last Updated : 31 Jul, 2024 09:18 PM

5  

Published : 31 Jul 2024 09:18 PM
Last Updated : 31 Jul 2024 09:18 PM

“ரயில்வே பட்ஜெட்டை ஒழித்துக் கட்டியது பாஜக” - மக்களவையில் சு.வெங்கடேசன் விமர்சனம்

மதுரை எம்பி சு.வெங்கடேசன்

புதுடெல்லி: மத்திய ரயில்வே மீதான வரவு செலவு அறிக்கை மீது இன்று நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பேசிய மதுரை எம்பி சு.வெங்கடேசன், ரயில்வே பட்ஜெட்டை ஒழித்துக் கட்டிய பெருமை பாஜகவையே சேரும் என்று மத்திய அரசை விமர்சித்து பேசினார்.

இதுகுறித்து மதுரை தொகுதி எம்பியான சு.வெங்கடேசன் மக்களவையில் பேசியது: “ஒரு காலத்தில் ரயில்வேக்கு என்று இருந்த பட்ஜெட் இன்று இல்லை. அரசாங்கங்கள் பட்ஜெட்டில் சில துறைகளுக்கான நிதியை ஒழித்துக்கட்டும். ஆனால், ஒரு பட்ஜெட்டையே ஒழித்துக் கட்டிய பெருமை பாஜகவையே சாரும். நான் எனக்காக மட்டும் கேட்கவில்லை. மத்திய அமைச்சருக்காகவும் சேர்த்துக் கேட்கிறேன். ஜூலை 18-ல் துவங்கி ஜூலை 30 வரை, 13 நாட்களில் 9 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. ஆனால் பொது பட்ஜெட்டில் கவச் எந்திரம் பற்றிய ஒரு சொல் கூட இல்லை.

அதை அவுட்சோர்சிங் செய்யாமல் ரயில்வே துறை மூலம் அதை உருவாக்கலாம். அந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இங்கே தலைகீழாக நடந்து கொண்டிருக்கிறது. நாம் மேம்படுத்தப்பட்ட பயணத்தைப் பற்றி விவாதிக்கவில்லை என்றால் விபத்தின் கோர மரணங்களைப் பற்றி நாடு விவாதித்துக் கொண்டிருக்கும். இங்கே நாம் எதை அனுமதிக்கப் போகிறோம். பிங்க் புத்தகம் பொது பட்ஜெட்டுக்கு அடுத்தநாள் வெளியிடப்படும். ஆனால் இன்றைக்கு வரை ரயில்வே துறையின் பிங்க் புத்தகம் வெளியிடப்படவில்லை.

இந்தக் கூட்டத் தொடர் முடிந்த பிறகு தான் பிங்க் புத்தகம் வெளியிடப்படும் என்று சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது. ஆவணத்தை வெளியிடாமலேயே எதைப்பற்றி விவாதிப்பது? பிங்க் புத்தகம் ரயில்வே வரலாற்றில் இதுவரை இத்தனை நாள் வெளியிடாமல் இருந்ததில்லை. இப்பொழுது ஏன் இவ்வாறு நடக்கிறது? தமிழகத்தின் 10 ரயில்வே திட்டங்களுக்கு, புதிய ரயில்வே வழித்தடத்துக்கு கடந்த பல ஆண்டுகளாக தலா ரூ1,000 ,மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது.

தொடர்ந்து இந்த அவையிலே நாங்கள் கவனப்படுத்தி இருக்கிறோம். கடந்த ஆண்டு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது . ஆனால் பாதுகாப்பு நிதியில் இருந்து அது ஒதுக்கப்பட்டது என்று கூறி அதைத் திரும்பப் பெற்றுவிட்டனர். இந்த ஆண்டு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. ஒருவேளை ஏற்கெனவே பொது பட்ஜெட்டில் தமிழகத்துக்கு செய்த அநீதி , ரயில்வேயிலும் செய்யப்பட்டு இருக்குமோ? என்ற அச்சம் வருகிறது. எங்கள் அச்சம் பொய்யானது என அமைச்சர் சொன்னால் எங்களுக்கு மகிழ்ச்சி .

தமிழகத்துக்கு உரிய நிதியை நீங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நான் இங்கே கேட்டுக் கொள்கிறேன். தென்னக ரயில்வேயின் மிக முக்கியமான மண்டலம் , மதுரை மண்டலம். மதுரையினுடைய போக்குவரத்து நெரிசல், மிகக் கடுமையானது. திருவனந்தபுரத்துக்கு பேட்டை ரயில்நிலையம் இருப்பதைப் போல , சென்னைக்கு எழும்பூர், சென்ட்ரல் இருக்கிறது . தாம்பரம், ராயபுரம் புதிய முனையங்களாக விரிவாக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல மதுரை கூடல்நகர் முனையத்தை புதுமுனையமாக அறிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அங்கே போதுமான நிலம் முழுமையாக இருக்கிறது. அதேபோல தூத்துக்குடி துறைமுகம், மற்றும் சிமெண்ட் ஆலைகளில் இருந்து வரும் சரக்கு வண்டிகளால் மதுரை ரயில் முனையத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. அதற்காக ஒரு புதிய வழித்தடம் உருவாக்கப்பட வேண்டும். சோழவந்தான் , செக்கானூரணி வழியாக சிவரக்கோட்டை செல்கிற ஒரு புதிய வழித்தடம் உருவாக்கப்பட்டால் 27 கிமீ மிச்சமாகும்.

அதேபோல மிக முக்கியமாக உறுப்பினர்கள் குறிப்பிட்டதைப் போல மதுரை-அருப்புக்கோட்டை- தூத்துக்குடி வழித்தட சர்வே முடிந்து விட்டது. அதற்கு நிதி ஒதுக்க வேண்டும். மதுரை-மேலூர்- திருப்பத்தூர்- காரைக்குடி புதிய வழித்தடம் பல ஆண்டுகளாக சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு குறைந்தபட்சத் தொகையாவது ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மூத்தோர்களுக்கான பயணச் சலுகை, கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு விட்டது. 6 கோடி முதியோர்கள் முன்பதிவு செய்தும், 6 கோடி முதியோர்கள் முன்பதிவு செய்யாமலும் பயணம் செய்தனர். அவற்றை நிறுத்தியதால் எங்களுக்கு ரூ.1,667 கோடி மிச்சம் என்று அரசு சொல்கிறது.

தனது வீட்டில் இருக்கிற பெற்றோருக்கு 3 வேளைக்கு பதில் 2 வேளை உணவு கொடுத்ததால் என்னுடைய வீட்டின் பட்ஜெட் ரூ.5,000 மிச்சமாகிவிட்டது எனச் சொல்வது போல் உள்ளது. இப்படி சொல்லும் ஒரு மகனுக்கு ஊரிலே இருக்கிற பெயரை நான் இந்த அவையிலே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். எனவே மிக முக்கியமாக திண்டுக்கல் முதல் சபரிமலை வரையிலான புதிய வழித்தடத்தையும் நீங்கள் உருவாக்க வேண்டும்.

இந்த அவையிலே நான் தமிழிலே பேசுகிறேன். நீங்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் கேட்கிறீர்கள் . இதேபோல பயணச்சீட்டு வாங்குகிற ஒவ்வொரு பயணியும் மொழிபெயர்ப்பாளரோடு சென்று பயணச்சீட்டு மையத்தில் நிற்க முடியாது. காரணம் அவ்வளவு பயணச்சீட்டு மையத்திலும் இந்தி தெரிந்தவர்கள். தமிழ்மொழி தெரியாதவர்களே இன்றைக்கு ரயில்வேயில் இருக்கிறார்கள். எனவே மண்டல அளவிலான பணியிடங்களை ரயில்வே தேர்வு வாரியம் உறுதி செய்ய வேண்டும்.

இந்தியாவிலேயே அதிக நகர்மயமான மாநிலம் தமிழகம். சென்னை , கோவை , திருச்சி , மதுரை , ஓசூர் , தூத்துக்குடி, சேலம், ஈரோடு என்று பத்துக்கும் மேற்பட்ட நகரங்கள் இருக்கிறது. எனவே உள்கட்டமைப்பு மிக முக்கியமானது. அதில் ரயில்வேயின் பங்கு மிக முக்கியமானது. எனவே நீங்கள் தமிழகத்தை வஞ்சிக்கக்கூடாது, உரிய நிதி ஒதுக்கித்தர வேண்டும்,” என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x