Published : 31 Jul 2024 06:14 PM
Last Updated : 31 Jul 2024 06:14 PM

“இது குற்றம்சாட்டும் நேரம் அல்ல!” - அமித் ஷாவுக்கு பினராயி விஜயன் பதில் | வயநாடு நிலச்சரிவு

திருவனந்தபுரம்: "குற்றம்சாட்டுவதற்கான நேரம் இதுவல்ல. அமித் ஷாவின் கருத்துகளை நான் விரோதமாக எடுத்துக்கொள்ளவில்லை" என்று வயநாடு நிலச்சரிவு தொடர்பான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில் கூறியுள்ளார்.

வயநாடு நிலச்சரிவு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் அமித் ஷா பேச்சு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பினராயி விஜயன், "இந்திய வானிலை ஆய்வு மையம் வயநாடு மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை மட்டுமே விடுத்தது. எனினும், வயத்தில் 500 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட மிக அதிகம். செவ்வாய்க்கிழமை காலை நிலச்சரிவு ஏற்பட்ட பின்னரே வயநாடு மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குற்றம்சாட்டுவதற்கான நேரம் இதுவல்ல. அமித் ஷாவின் கருத்துகளை நான் விரோதமாக எடுத்துக் கொள்ளவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

அமித் ஷா கூறியது என்ன? - முன்னதாக, வயநாடு நிலச்சரிவு விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "வானிலை குறித்து 7 நாட்களுக்கு முன்பே கணிக்கும் எச்சரிக்கை அமைப்பு மத்திய அரசு சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

உலகின் அதிநவீன முன்னெச்சரிக்கை அமைப்பு இந்தியாவிடம் உள்ளது. ஏழு நாட்களுக்கு முன்னரே வானிலையை கணிக்கக் கூடிய ஆற்றல் பெற்ற உலகின் 4 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கையை மத்திய அரசு கடந்த 23-ம் தேதியே வழங்கியது. எச்சரிக்கையைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் 9 பட்டாலியன்கள் நிறுத்தப்பட்டன. நேற்று கூடுதலாக மூன்று குழுக்கள் அனுப்பப்பட்டன.

மீண்டும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டது. ஜூலை 26-ம் தேதி அனுப்பப்பட்ட செய்தியில், 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என்றும், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும், சேறும் சகதியுமாக மழைநீர் வரலாம் என்றும், அதில் புதைந்து மக்கள் உயிரிழக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. முன்னரே எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக் கொண்டிருந்தால், நிலைமை இவ்வளவு மோசமாகியிருக்காது. ஆனால், இந்திய அரசின் முன்னெச்சரிக்கை அமைப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. தயவுசெய்து நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். கூச்சலிடாதீர்கள். வானிலை எச்சரிக்கை அறிக்கையை தயவுசெய்து படியுங்கள்.

கேரள மக்களுடனும் அங்குள்ள அரசுடனும் நாம் நிற்க வேண்டிய நேரம் இது. நரேந்திர மோடி அரசு, கேரள மக்களுடனும் அங்குள்ள அரசாங்கத்துடனும் பாறை போல் நிற்கும் என்பதை நான் சபையில் உறுதியளிக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.

இதனிடையே, கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 191 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முழு நிலவரம் > வயநாடு நிலச்சரிவு பலி 194 ஆக அதிகரிப்பு: கனமழையால் மீட்புப் பணிகள் பாதிப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x