Published : 31 Jul 2024 01:56 PM
Last Updated : 31 Jul 2024 01:56 PM
புதுடெல்லி: ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்குமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "நாக்பூர் டிவிஷனல் ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், காப்பீட்டுத் துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஒரு குறிப்பாணையை என்னிடம் அளித்துள்ளனர். அவர்கள் எழுப்பிய முக்கிய பிரச்சினை, ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெறுவது தொடர்பானது.
ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் இரண்டுக்கும் 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டி விதிப்பது என்பது வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு வரி விதிப்பதற்கு சமம்.
வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மை எனும் அபாயத்தை உணர்ந்த ஒரு நபர், இந்த அபாயத்தை கருத்தில் கொண்டு தனது குடும்பத்திற்கு சில பாதுகாப்பை வழங்குவதற்காக எடுக்கும் காப்பீடுக்கான பிரீமியத்திற்கு வரி விதிக்கப்படக்கூடாது என ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் கருதுகிறது.
அதேபோல், மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்தின் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி, சமூகத்துக்கு அவசியமான இந்த பிரிவின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.
உடல்நலக் காப்பீட்டு பிரீமியங்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
மூத்த குடிமக்களுக்கு சிரமமாக இருப்பதால், ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெறுவதற்கான எனது ஆலோசனையை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலியுங்கள்" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT