Published : 31 Jul 2024 01:25 PM
Last Updated : 31 Jul 2024 01:25 PM

“மக்கள் மனநிலை காங்கிரஸுக்கு சாதகமாக உள்ளது” - எம்.பி.க்கள் மத்தியில் சோனியா காந்தி பேச்சு

புதுடெல்லி: “மக்களின் மனநிலை காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளது என்றும் நாம் அதனை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றும்” அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பிக்கள் மத்தியில் உரையாற்றிய சோனியா காந்தி, “பொதுமக்களின் மனநிலை கட்சிக்கு சாதகமாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் நாம் மேற்கொண்ட பிரச்சாரம் காரணமாக கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கையும், நல்லெண்ணமும் உருவாகி இருக்கிறது. இதனை நாம் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

நாம் மனநிறைவு மனநிலைக்கோ, அதிகப்படியான தன்னம்பிக்கைக்கோ சென்றுவிடக்கூடாது. மக்களவைத் தேர்தலில் வெளிப்பட்ட சாதகமான சூழலை கருத்தில் கொண்டு நாம் சிறப்பாக செயல்பட்டால், தேசிய அரசியலில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் கோரிக்கைகள் முழுவதுமாக மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மத்திய பட்ஜெட்டைப் பற்றி சாதகமாக பேசினாலும், ஏமாற்றம் பரவலாக உள்ளது.

கன்வர் யாத்திரை பாதையில் கடை வைத்திருப்பவர்கள் தங்கள் பெயர் அடங்கிய பலகையை பலரும் பார்க்கும் வகையில் வைக்க வேண்டும் என்ற உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களின் உத்தரவை நல்லவேளையாக உச்ச நீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு தடுத்துவிட்டது.

ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளில் அரசு அதிகாரிகள் பங்கேற்கலாம் என எப்படி விதிகள் திடீரென மாற்றப்பட்டுள்ளன என்பதைப் பாருங்கள். ஆர்எஸ்எஸ் தன்னை ஒரு கலாச்சார அமைப்பு என்று அழைத்துக் கொள்கிறது. ஆனால், அது பாஜகவின் அரசியல் மற்றும் சித்தாந்தத்துக்கு அடிப்படையாக இருக்கக் கூடிய அமைப்பு என்பதை உலகம் அறியும்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. சாதிவாரியாக மக்கள்தொகை விகிதம் எவ்வாறு இருக்கிறது என்பதை யாரும் அறிந்து கொள்வதை இது தடுக்கிறது. மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு கணிசமான அளவில் வாக்குகள் குறைந்துள்ளன. இருந்தும், அக்கட்சி எந்தப் பாடத்தையும் கற்கவில்லை. சமூகங்களை தொடர்ந்து அது பிளவுபடுத்தி வருகிறது” என தெரிவித்தார்.

ஹரியாணா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சோனியா காந்தி இவ்வாறு பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x