Published : 31 Jul 2024 01:20 PM
Last Updated : 31 Jul 2024 01:20 PM

ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் 4-வது நாளாக தொடர் போராட்டம்

கோப்புப்படம்

புதுடெல்லி: திடீர் வெள்ளத்தில் சிக்கி டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் புதன்கிழமை நான்காவது நாளை எட்டியுள்ளது. தங்களின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனக்கூறி மாணவர்கள் தொடர் போராட்டாத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் குறித்து அதில் ஈடுபட்டுவரும் மாணவர்களில் ஒருவரான ராபின் கூறுகையில், “சன்ஸ்கிருதி ஐஏஎஸ் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டபோதும் எங்களுக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டது. ஆனால் விபத்துக்கு ஒரு வாரத்துக்கு பின்னர் மையம் மீண்டும் திறப்பட்டது. வெறும் உத்தரவாதங்களால் எங்களின் போராட்டம் பலவீனப்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு தேவை நடவடிக்கை.

போலீஸார் எங்களின் போராட்டத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். மூன்று உயிர்கள் பறிபோயிருக்கிறது. இது சாதாரண விஷயம் இல்லை. இந்தப் போராட்டம் சிறிய அளவிலேயே நடக்கிறது அது மிகப்பெரிய அளவில் மாறவேண்டும். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்” என்றார்.

“நாங்கள் தொடர்ந்து டெல்லி போலீஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நாங்கள் புதிதாக சில கோரிக்கைகளை வைத்துள்ளோம். நாங்கள் போராட்டதைத் தொடங்கும் போது அமைதியான முறையில் அதை நடத்த முடிவெடுத்தோம். ஏனெனில் நாங்கள் மக்கள் பணிகளுக்காக முயற்சி செய்பவர்கள்.

அவர்கள் எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளனர். அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று பார்க்கலாம். 13 - 18 மாணவர்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர். எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாங்கள் தண்ணீர் கூட குடிக்கப்போவதில்லை.

எங்களின் போராட்டம் பொதுமக்களை குறிப்பாக குழந்தைகளைப் பாதிப்பதை நாங்கள் விரும்பவில்லை. குழந்தைகள் பள்ளிக்கும போகும் போதும், வரும்போதும் நாங்கள் கதவுகளைத் திறந்தே வைத்திருக்கிறோம். அதன் பின்னர் நாங்கள் கதவினைப் பூட்டிவிடுவோம்” என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பணிகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தொடங்கி இருப்பதாக மத்திய கூடுதல் டிசிபி சச்சின் சர்மா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “உயிரிழப்புகள் மற்றும் பயோமெட்ரிக் தொடர்பாக சமூகவலைதளங்களில் பல்வேறு பொய்யான தகவல்கள் உலா வருகின்றன. அவர்கள் அவற்றை நம்புகின்றனர். நாங்கள் அவர்களுக்கு உண்மையை எடுத்துக்கூற முயற்சிக்கிறோம். அரசு நிறுவனங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளை அவர்களுக்கு கூறுகிறோம். துணைநிலை ஆளுநர் கூட நேற்று ஒரு கூட்டம் நடத்தி இருக்கிறார். மாணவர்களின் பிரதிநிதிகளும் அதில் கலந்து கொண்டனர். மாணவர்களின் கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர்.” என்றார்.

அண்மையில் பெய்த கனமழை காரணமாக டெல்லியில் உள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்துக்குள் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது. அங்கு பயிற்சி மையத்தின் நூலகம் செயல்பட்டு வந்துள்ளது. இதனால், அங்கு குறிப்பெடுத்துக் கொண்டிருந்த ஏராளமான மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதில், 2 மாணவிகள், ஒரு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x