Published : 31 Jul 2024 12:59 PM
Last Updated : 31 Jul 2024 12:59 PM
வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவினைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தின் 6 பிரிவுகள் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து மீட்பு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே, புதன்கிழமை காலை முதல் அடுத்தடுத்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 160-ஐ கடந்துள்ளது. 1,000-த்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் 3000க்கும் அதிகாமானோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம், சேறு, சகதி, உருண்டு கிடக்கும் பாறைகள், மரங்கள், புதைந்த கட்டிடங்கள் என கடும் சவால்களுக்கு இடையே ராணுவம், தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இது குறித்த ராணுவ அறிக்கையில், “கன்னூரில் உள்ள ராணுவ மையத்தில் இருந்து நான்கு படை பிரிவும், 122 டிஏ பட்டாலியனும் மாநில மீட்புக் குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்கின்றன. எம்இஜி மையத்தில் இருந்து ஓர் அதிகாரி, ஒரு ஜெசிஓ, மற்றும் மூன்று ஓஆர்கள் அடங்கிய சிறப்புக்குழு ஒன்று, மேப்பாடி - சூரல்மலை சாலையை மறுசீரமைக்கவும், பாதிக்கப்பட்ட இடங்களில் பாலம் அமைக்கத் தேவையான உதவிகளைச் செய்ய செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு அங்கு சென்று சேர்ந்தது.
பாரா ரெஜிமெண்ட் பயிற்சி மையத்தின் அதிகாரி பிரிகேடியார் அர்ஜுன் சீகன் மற்றும் அவரது குழுவினர் செவ்வாய் இரவு 11 மணிக்கு வயநாடு சென்று சேர்ந்தனர். பாலம் அமைப்பதற்கு தேவையான இடங்களை அடையாளம் காண்பது, இந்திய ராணுவத்தின் ஹெச்ஏடிஆர் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக ஒரு கட்டுப்பாட்டு மையத்தினையும் அவர்கள் உருவாக்குவர்.
மருத்துவக்குழுக்கள் அடங்கிய மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் மீட்பு படைகளின் (ஹெச்ஏடிஆர்) இரண்டு பிரிவுகள் செவ்வாய்க்கிழமை திருவனந்தபுரத்தில் இருந்து கோழிக்கோட்டுக்கு இரவு 11 மணிக்குச் சென்று சேர்ந்தது. இவர்கள், புதன்கிழமை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்வர்.
மெட்ராஸ் இன்ஜினியரிங் க்ரூப் அண்ட் சென்டரைச் சேர்ந்த இன்ஜினியரிங்க் டாஸ்க் ஃபார்ஸ், ஜெசிபி, டிஏடிஆர்ஏ மற்றும் 110 அடி பெய்லி பாலம் உள்ளிட்ட தளவாடங்களுடன் புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு சென்று சேர்ந்துள்ளது. இதன் மீட்பு பணிகள், சிறப்பு குழுவின் கணிப்புகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய கடலோரக் காவல் படையும் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கொச்சி மற்றும் பேப்பூரைச் சேர்ந்த கடலோரக் காவல் படையின் மீட்பு படைகள் வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கடலோரக் காவல் படை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவத்தின் ஆறு பிரிவு படைகளும் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகளுடன் இணைந்து இன்றைய பணிகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளன. மேப்பூர் - சூரல்மலை சாலை பாலம் கட்டும் பணிகளைத் தொடங்கும். இவைகளில் சில மண் அள்ளும் கருவிகளை வான்வழியாக மறுகரைக்குக் கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளன. பிரிகேடியர் அர்ஜூன் சீகனின் குழு காலை 9.30 மணிக்கு வான்வழியாக ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதன் அறிக்கை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் தேவைகளின் அடிப்படையில் கூடுதல் தேவைகள் திட்டமிட்டப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT