Published : 31 Jul 2024 08:48 AM
Last Updated : 31 Jul 2024 08:48 AM
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் மண்ணில் புதைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில், 700 புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது.
கேரளாவின் கொச்சி நகரை தலைமையிடமாகக் கொண்டு ஹாரிசன்ஸ் மலையாளம் பிளான்டேசன் லிமிடெட் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்துக்கு கேரளாவில் சுமார் 10-க்கும் மேற்பட்ட தேயிலை, காபி தோட்டங்கள் உள்ளன. 10-க்கும் மேற்பட்ட ரப்பர் தோட்டங்கள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு பகுதியில் ஹாரிசன்ஸ் மலையாளம் நிறுவனத்துக்கு சொந்தமான தேயிலை, காபி தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களுக்காக தேயிலை தோட்டப் பகுதிகளிலேயே தற்காலிக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தன. நிலச்சரிவு, வெள்ளத்தில் இந்த வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து ஹாரிசன்ஸ் மலையாளம் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் சுனில் ஜான் கூறும்போது, "எங்களது நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி கிரிஷ், அவரது மனைவி மற்றும் 3 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக எங்களது தொழிலாளர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. எங்களது தேயிலை தோட்டத்தில் உள்ள பங்களாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய முடியவில்லை" என்றார்.
கேரள போலீஸார் கூறியதாவது: இப்போதைய நிலையில் ஹாரிசன்ஸ் மலையாளம் நிறுவனத்தில் பணியாற்றிய 700 தொழிலாளர்களையும் காணவில்லை என்றே கருதுகிறோம். அவர்களில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சுகிறோம். தேயிலை தோட்ட பகுதிக்கு செல்வதற்கான பாலம் இடிந்துவிட்டது. மலைப்பகுதி முழுவதும் மேகமூட்டமாக இருக்கிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
பகலில் மட்டுமே முழுமையாக மீட்புப் பணியில் ஈடுபட முடியும். இரவில் வெளிச்சம் இல்லாத சூழலில் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்படும். தேயிலை தோட்டப் பகுதிக்கு செல்ல தற்காலிக பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதன்கிழமை அந்த பகுதிக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபடுவோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT