Published : 31 Jul 2024 04:53 AM
Last Updated : 31 Jul 2024 04:53 AM

வந்தே பாரத் ரயிலில் சைவ உணவுக்கு பதில் அசைவ உணவு வழங்கிய ஊழியரை அறைந்த பயணி

புதுடெல்லி: ரயில் பயணத்தின் கேட்டரிங் மூலம் விநியோகிக்கப்படும் உண வுகளால் பல பிரச்சினைகள்ஏற்படுவது வழக்கம். உணவின்தரம், சுவை சரியில்லை என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். சிலநேரங்களில் உணவு கெட்டுப்போகிவிட்டதாகவும் புகார் எழுகிறது. ஆனால் சமீபத்தில் வந்தே பாரத் ரயிலில் நடந்த சம்பவம் சற்று வித்தியாசமானது.

ஹவுராவிலிருந்து ராஞ்சிக்கு கடந்த 26-ம் தேதி வந்தே பாரத் ரயில் சென்றது. அதில் சைவ உணவு முன்பதிவு செய்திருந்த வயதான பயணி ஒருவருக்கு, கேட்டரிங் ஊழியர் தவறுதலாக அசைவ உணவு பார்சலை வழங்கிவிட்டார். ஒவ்வொரு உணவு பாக்கெட்டின் மேல் அட்டையில் சைவம், அசைவம் என அச்சிடப்பட்டிருக்கும். அதைப் படித்துப் பார்க்காமல் சைவ உணவை ஆர்டர் கொடுத்திருந்த பயணி உணவு பாக்கெட்டை பிரித்து சாப்பிட்டார். அந்த உணவு அசைவம் என தெரிந்ததும், முதியவரான அந்த பயணிக்கு கடுங்கோபம் ஏற்பட்டது. உணவுவிநியோகம் செய்த ஊழியரை அழைத்து விளக்கம் கேட்டார்.அவர் தவறுதலாக கொடுத்துவிட்டேன் என கூறி மன்னிப்பு கேட்டார். ஆனால், அவரை அந்தப் பயணி கன்னத்தில் இரு முறை அறைந்தார். இதைப்பார்த்து மற்ற பயணிகள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர்.

அவர்கள் ஊழியருக்கு ஆதர வாக, அடித்த ரயில் பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கேட்டரிங் ஊழியரிடம், ரயில் பயணி மன்னிப்பு கேட்க வேண்டும் என சக பயணிகள் வலியுறுத்தினர். அதற்கு அந்த முதியவர் மறுத்தார். இந்த வாக்குவாதத்தால் அந்த ரயில் பெட்டியில் கடும் அமளி ஏற்பட்டது. இதைக் கேட்டு ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் மற்றும் கேட்டரிங் மேலாளர் ஆகியோர் வந்தனர். உணவு பார்சலை படித்துப் பார்க்காமல் சாப்பிட்டதும், அதற்காக ஊழியரை தாக்கியதும் தவறு என அவர்கள் முதியவரிடம் சுட்டிக்காட்டினர்.

ஆனால், அந்தப் பயணி தனது தவற்றை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து அனைவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் ஊழியருக்கு ஆதரவாக பேசிய பயணி ஒருவர், அந்த முதியவரை அடிப்பதற்கு கையை ஓங்கினார். அதன்பின்பே அந்த முதியவர் தனது இருக்கைக்கு சென்று அமர்ந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x