Published : 31 Jul 2024 05:25 AM
Last Updated : 31 Jul 2024 05:25 AM

தமிழ் எழுத்தாளர் சிவசங்கரிக்கு இலக்கிய விருது: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வழங்கினார்

ஹைதராபாத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் சிவசங்கரிக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இலக்கிய விருது வழங்கினார்.

ஹைதராபாத்: எழுத்தாளர் சிவசங்கரிக்கு இலக்கிய விருதினை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வழங்கி கவுரவித்துள்ளார்.

தமிழகத்தின் பிரபல எழுத்தாளரான சிவசங்கரி, சிறுகதைகள், நாவல்கள், பயணக் கட்டுரைகள், கட்டுரை தொகுப்புகள் மற்றும் வாழ்க்கை சரிதங்களை எழுதி உள்ளார். இவர் எழுதிய ஆயுள் தண்டனை எனும் நாவல் கண்ணீர் பூக்கள் எனும் பெயரில் திரைப்படமாக வெளியானது.

இதேபோன்று, அவன்.. அவள்.. அது, ஒரு மனிதனின் கதை, திரிவேணி சங்கமம், நண்டு, பெருமை, 47 நாட்கள் ஆகியவை திரைப்படங்களாக இவரது நாவலை தழுவி எடுக்கப்பட்டன. இவரது ‘பாரத இலக்கியம்’ எனும் நூலுக்கு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது கடந்த 2010-ம் ஆண்டு வழங்கப்பட்டது. இலக்கியம் மற்றும் இந்திய இணைப்பு எனும் நூலுக்கு கனடா நாட்டின் இலக்கிய ஆய்வு மற்றும் மொழிபெயர்ப்புக்கான விருது 2022-ல் வழங்கி கவுரவிக்கப்பட்டது. சூர்ய வம்சம் எனும் நூலுக்காக 2023-ல் சரஸ்வதி சம்மான் விருதையும் எழுத்தாளர் சிவசங்கரி பெற்றுள்ளார்.

இவ்வாறு எழுத்தாளராக பல சாதனைகளை புரிந்த சிவசங்கரிக்கு ஹைதராபாத்தில் மறைந்த ‘விஸ்வபிரம்மா’ பத்மபூஷண் டாக்டர் சி. நாராயண ரெட்டியின் 93-வது ஜெயந்தி விழாவையொட்டி, அவரது மனைவி சுசீலா நாராயண ரெட்டி அறக்கட்டளை சார்பில் இலக்கிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வழங்கினார். அப்போது சிவசங்கரிக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி பொன்னாடை போர்த்தி, ரூ.5 லட்சம் ரொக்க பரிசும் வழங்கி கவுரவித்தார்.

ஒரு நேர்காணலுக்காக டாக்டர் சி. நாராயண ரெட்டியை சந்தித்ததையும், அவரின் எழுத்து, தாய்மொழியில் அவருக்கு இருந்த புலமை மற்றும் திறனை கண்டு ஒரு சமகால எழுத்தாளராக மிகவும் ஆச்சர்யம் அடைந்ததாக சிவசங்கரி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.யும், நடிகருமான முரளிமோகன், பத்மபூஷண் விருது பெற்றவரும் ஷாந்தா பயோடெக் தலைவருமான கே.ஐ. வரபிரசாத் ரெட்டி, தெலங்கானா அரசு ஆலோசகர் நரேந்திர ரெட்டி, அரசு கொறடா ஆதி நிவாஸ் எம்எல்ஏ மற்றும் டாக்டர் நாராயண ரெட்டியின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x