Published : 30 Jul 2024 06:57 PM
Last Updated : 30 Jul 2024 06:57 PM
புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 88% அதிகரித்து தற்போது நாட்டில் 731 மருத்துவக் கல்லூரிகள் உள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ள மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் அனுப்பிரியா பட்டேல், "மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அரசு அதிகரித்துள்ளதுடன், எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களையும் அதிகரித்துள்ளது.
2014-ம் ஆண்டுக்கு முன்பு 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 731-ஆக 88 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், 2014-ம் ஆண்டுக்கு முன்பு 51,348 ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை, தற்போது 118 சதவீதம் அதிகரித்து 1,12,112 ஆக உயர்ந்துள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு 31,185 ஆக இருந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை தற்போது 72,627 ஆக 133% அதிகரித்துள்ளது.
கடந்த 2021-22-ம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 48,212 இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களும், 28,260 முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களும் இருந்தன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 43,915 இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களும், 17,858 முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களும் இருந்தன.
2022-23-ம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 51,912 இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களும், 30,211 முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களும் இருந்தன. தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 44,365 இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களும், 19,362 முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களும் இருந்தன.
2023-24–ம் ஆண்டில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் 56,300 இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களும், 33,416 முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களும் இருந்தன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 52,640 இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களும், 21,418 முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களும் இருந்தன" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT