Published : 30 Jul 2024 06:29 PM
Last Updated : 30 Jul 2024 06:29 PM
திருவனந்தபுரம்: “வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளானது, கேரளா இதுவரை கண்டிராத மிகப் பெரிய இயற்கை பேரழிவு. இதுவரை 93 உடல்களை மீட்டுள்ளோம். இந்த எண்ணிக்கை அதிகமாகலாம்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், "வயநாடு நிலச்சரிவு, கேரளா இதுவரை கண்டிராத மிகப் பெரிய இயற்கை பேரழிவு. முதல் நிலச்சரிவு செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு நிகழ்ந்தது. இதன்பின் 4.30-க்கு இரண்டாவது முறையாக நிலச்சரிவு நிகழ்ந்தது. சூரல்மலா பகுதியில் உள்ள ஒரு பள்ளி முழுவதும் மண்ணின் அடியில் புதைந்துவிட்டது. இதே நிலைதான் குடியிருப்புகளுக்கும் நிலவியது.
இதுவரை 93 உடல்களை மீட்டுள்ளோம். 128 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சில உடல்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டபோது கண்டெடுக்கப்பட்டது. நேற்றிரவு தூங்கச் சென்றவர்கள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டனர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம். மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 3,069 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 5 அமைச்சர்கள் ஒருங்கிணைந்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளைக் கண்காணித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரம் குறித்துக் கேட்டறிந்தனர். பிரதமர் மோடி, ராகுல் காந்தி உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள், இந்த நெருக்கடியை சமாளிக்க இணைந்து செயல்படுவோம் என்று உறுதியளித்துள்ளனர்.
வயநாட்டில் மீட்புப்பணிகளில் 321 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ராணுவமும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 60 பேர் வயநாட்டுக்கு வந்துள்ளனர். கடற்படை, விமானப் படையும் மீட்புப் பணிக்கு விரைந்துள்ளன. மண்ணில் புதைந்துள்ளவர்களை கண்டறிய போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளன.
நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலா பேரிடர்கள் பாதிக்கும் பகுதியல்ல. ஆனால், முண்டக்கை நிலச்சரிவு அதிகம் ஏற்படக்கூடிய பகுதி. இயற்கை பேரிடர்கள் அதிகம் ஏற்படும் இடமும் கூட. முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் உண்டான மண்சரிவும், பாறைகளும் 6 கிலோ மீட்டர் அடுத்து உள்ள சூரல்மலா பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டது. சூரல்மலா, மக்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதி. மேலும், ஆற்றின் ஓரத்தில் அமைத்துள்ளது. அதேநேரம், முண்டக்கை அந்த அளவுக்கு மக்கள் வசிக்கக் கூடிய இடமல்ல.
கனமழை பெய்யும் என்ற முன்னறிவிப்பு காரணமாக அப்பகுதி மக்களை பெரும்பாலானோரை முகாம்களில் தங்கவைத்தோம். அதனால் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இப்பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இன்று வரை 64 முதல் 224 மி.மீ மழை பெய்யும் என்று சொல்லப்பட்டது. ஆனால், 48 மணிநேரத்தில் 572 மி.மீ மழைப் பொழிவு இப்பகுதியில் இருந்துள்ளது. எதிர்பாராத இந்த மிக கனமழையும், மேக வெடிப்பும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த நிலச்சரிவும் இந்த பேரிடர் நிகழ காரணமாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, வயநாடு நிலச்சரிவை அடுத்து கேரளத்தில் இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT