Published : 30 Jul 2024 09:13 PM
Last Updated : 30 Jul 2024 09:13 PM

வயநாடு நிலச்சரிவு: பலி 120+, மாயம் 100+, மீட்புப் பணிகள் தீவிரம் - முழு விவரம்

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக செவ்வாய்க்கிழமை அதிகாலை மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்தப் பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்தது. 125-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏறத்தாழ 100 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணுவ உதவியுடன் மீட்புப் பணி தொடரும் நிலையில், வயநாடு நிலச்சரிவு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், "வயநாடு நிலச்சரிவு, கேரளா இதுவரை கண்டிராத மிகப் பெரிய இயற்கை பேரழிவு” என்று குறிப்பிட்டார். உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் என அஞ்சப்படுவதாக தெரிவித்த அவர், 3,069 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். | வாசிக்க > “கேரளா இதுவரை கண்டிராத இயற்கை பேரழிவு” - வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை விவரித்த பினராயி விஜயன். | மீட்புப் பணியில் மாநில, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவம், கடற்படை என பலரும் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.

பெரும் மழையும், வெள்ளமும், நிலச்சரிவும் கேரளாவுக்கு புதிதல்ல என்றாலும், மீண்டும் மீண்டும் இவை நடக்குமானால் அதன் காரண, காரியங்கள் தான் என்னவென்ற கேள்விகள் எழாமல் இல்லை. ஒரு கனமழை நாள் என்றுதான் வயநாடு மாவட்ட மக்கள் ஜூலை 29-ம் தேதி பின்னிரவுப் பொழுதை நினைத்திருப்பார்கள். ஜூலை 30 பொழுது விடியும்போதே அடுத்தடுத்து நிலச்சரிவுகள் தமது அன்புக்குரியவர்கள் வாரிக் கொண்டு செல்லும் என யோசித்துப் பார்த்திருக்க மாட்டார்கள். மழையின்போது மரணத்தை யாரும் சிந்திப்பதில்லை. ஆனால், எல்லா மழையும் ரம்மியாக இருந்துவிடுவதில்லை. அந்த மழையும் அப்படித்தான் கோரத்தாண்டவம் ஆடியிருக்கிறது.

அந்த மழையின் தாக்கம் அதிகாலை முதலே தெரியத் தொடங்கியது. வயநாட்டில் 300 மில்லி மீட்டர் மழை, சூரல்மலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு. பல இடங்களில் நிலச்சரிவு என்ற செய்தி காலை 7 மணிக்கெல்லாம் ஊடகங்களில் தெறித்து விழுந்தன. அப்போது 7 என்று தொடங்கிய உயிர் பலி எண்ணிக்கை இரவு 9 மணிக்கு இந்தச் செய்தியை பதிவு செய்தபோது 120-ஐ கடந்து சென்று கொண்டிருந்தது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் சூழ்ந்துள்ளது.

4 மணி நேரத்தில் 3 நிலச்சரிவுகள்: பொதுவாகவே கேரளம் அதீத மழைப்பொழிவை சந்திக்கும் போதெல்லாம் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படுவது வயநாடு, மலப்புரம் மற்றும் இடுக்கி மாவட்டங்கள்தான். இந்த ஆண்டும் கனமழை அதிகமாக பெய்துவரும் கேரளத்தில், இன்று (ஜூலை 30) அதிகாலை வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரையிலான நான்கு மணிநேரத்தில் மூன்று பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

கேரள நிலபரப்பில் 14.5 சதவீதம் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடியவை. நிபுணர்களின் கூற்றின்படி ஆலப்புழாவைத் தவிர கேரளாவின் 13 மாவட்டங்கள் நிலச்சரிவு ஆபத்து கொண்டவையாகவே உள்ளன எனக் கூறுகின்றனர். கேரள மாநில பேரிடர் மேலாண்மை குழுவானது 1848 சதுர கிலோமீட்டர் பரப்பளவை, அதாவது மாநிலத்தின் மொத்த பரப்பளவில் 4.75 சதவீதமானது நிலச்சரிவால் அதிகம் பாதிக்கக்கூடிய பகுதியில் அமைந்துள்ளது என கணக்கிட்டுள்ளது.

அண்மையில் ஏஐ உதவியுடன் மேற்கொள்ளப்பட ஆய்வு ஒன்று கேரளாவின் 13 சதவீதம் பகுதி நிலச்சரிவுகள் அபாயம் கொண்டது, அதுவும் குறிப்பாக இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், பத்தனம்திட்டா, வயநாடு பகுதிகள் மிக மிக அதிக அபாயம் கொண்ட பகுதிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. கேரள மீன்வளம் மற்றும் சமுத்திர அறிவியல் பல்கலைழகம் இந்த ஆய்வை மேற்கொண்டு முடிவை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வு முடிவில் இடம்பெற்றிருந்த வயநாடு தான் இன்று மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவுகளுக்கான காரணம் என்ன? - காலநிலை மாற்றம், காடுகளை அழித்தன ஆகியன தான் கேரளாவில் மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்பட முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. அதேபோல் கடந்த சில ஆண்டுகளாக கேரளாவில் மழைப்பொழிவிலும் மாற்றம் உள்ளது. பருவமழை தாமதமாகத் தொடங்குவது தொடர்கதையாக உள்ளது. கேரள வன ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி ஒருவர் கடந்த 2020-ஆம் ஆண்டு அளித்த ஊடகப் பேட்டி ஒன்றில், நான் பள்ளியில் படித்த காலத்தில் ஜூன் 1 பள்ளி திறக்கும் நாளும் கேரளாவில் பருவமழை தொடங்கும் நாளும் ஒன்றாக இருக்கும். அதன் பின்னர் விட்டுவிட்டு மழை பெய்யும். பின்னர் ஜூலை இறுதி முதல் ஆகஸ்ட் பாதி வரை கனமழை பெய்யும்.” என்று இப்போது தாமதமாக தொடங்கும் பருவமழையை குறிப்பிட்டுக் கூறியிருந்தார்.

பருவநிலை மாற்றம் காரணமாக அதிக மழைப்பொழிவு நிலச்சரிவுகளை ஏற்படுத்துவதாகக் கூறப்படும் நிலையில், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களும் அதிக பாதிப்புகளுக்கு ஒரு காரணமாக இருக்கின்றன எனக் கூறப்படுகிறது. சாலைகளும், சிறுபாலங்களும் கட்டப்படும் முறையில் தற்கால பருவநிலை, மழைப்பொழிவு ஆகியனற்றை கணக்கில் கொண்டு கட்டுமானங்களை மேற்கொள்வதில்லை. பழைய கால மழைப்பொழிவுக்கு ஏற்பவே கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. ஆகையால் கட்டுமானங்களில் செய்யப்படும் மாற்றங்கள் சேதங்களைக் குறைக்கும். குறிப்பாக நிலச்சரிவு அபாய பகுதிகளில் கட்டுமானங்களுக்கு கூடுதல் கெடுபிடி தேவை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கவனிக்க வேண்டிய பதிவு: கேரள நிலச்சரிவு குறித்த இரங்கல்கள் தலைவர்களிடமிருந்து குவிந்து கொண்டிருக்க, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் தொடங்கி குஜராத் வரை நீளும் 1.60 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலை இயற்கை நமக்கு கொடுத்த பெருங்கொடை ஆகும். அதை பாதுகாக்கத் தவறியதன் விளைவு தான் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு ஆகும். தமிழகத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலையை சூறையாடும் செயல்கள் தொடர்கின்றன. இயற்கையை பாதுகாக்க வேண்டியதன் தேவை குறித்து வயநாடு நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்ற மிகவும் முக்கியமான பதிவைப் பகிர்ந்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் குரல்: வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. புதிதாக எம்.பி.யான சுரேஷ் கோபி மத்திய அரசிடம் பேசி எல்லா உதவிகளையும் செய்வேன் என்கிறார். பிரதமர் மோடி, கேரள முதல்வருக்குப் பேசி எல்லா உதவியும் செய்யப்படும் என உறுதியளிக்கிறார். வயநாட்டின் முன்னாள் எம்.பி., ராகுல் காந்தி, அடுத்த போட்டியாளராகக் கூடிய பிரியங்கா காந்தி அங்கே விரைவில் செல்ல உள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். அண்டை மாநிலமான நம் தமிழகம் சார்பில் ரூ.5 கோடி நிவாரணப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் காலத்தினால் செய்யப்படும் உதவிகள்.

தொழிலாளர்களின் நிலை என்ன? - முண்டக்கை பகுதியில் செயல்பட்டு வந்த ஹாரிசன்ஸ் தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்ட நிறுவனத்தில் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட 600 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்களில் 65 குடும்பங்கள் தேயிலைத் தோட்டத்தை ஒட்டிய ஓடை அருகே உள்ள லைன் வீடுகளில் வசித்துவந்தனர். அந்த வீடுகளில் வசித்தவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர் தொழிலாளர்களே. இந்த நிலையில் தான் இன்று அதிகாலை முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், இந்த லைன் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் தேயிலை தோட்ட குடியிருப்பில் தங்கியிருந்தவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.

இதற்கிடையில், 9497900402, 0471 2721566 ஆகிய 24 மணி நேர தொடர்பு எண்ணை கேரள மாநில கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது. கேரள மாநிலம் சென்ற தமிழக சுற்றுலா பயணிகளுக்காக 1070 என்ற உதவி எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x