Published : 30 Jul 2024 03:17 PM
Last Updated : 30 Jul 2024 03:17 PM

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

புதுடெல்லி: கேரளாவின் வயநாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இதனை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

மாநிலங்களவை கூடியதும் வயநாடு நிலச்சரிவு உயிரிழப்புகள் குறித்து அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கவலை தெரிவித்தார். தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அவையில் பேசிய உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், வயநாட்டுக்கு ராணுவத்தை அனுப்பி பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிலச்சரிவில் சுமார் 500 குடும்பங்கள் சிக்கித் தவிப்பதாகத் தெரிவித்த மற்றொரு உறுப்பினர் ஜோஸ் கே.மணி, இது ஒரு முக்கியமான பிரச்சினை என்று குறிப்பிட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி ஏ.ஏ.ரஹீம் பேசுகையில், மீட்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். வயநாடு தொடர்பாக பேசிய உறுப்பினர்கள் பலரும், வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மற்றும் உயிரிழப்புகளை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும், அதற்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அப்போது பேசிய பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி நட்டா, "இந்த துயரச் சம்பவம் தொடர்பாக மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மக்களை மீட்பது, உடல்களை மீட்டெடுப்பது மற்றும் அவசரகால உதவிகளை வழங்குவது ஆகியவை முதன்மைத் தேவை. இந்த சோகத்தை நிவர்த்தி செய்வதில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவோம்" என்று தெரிவித்தார். "மத்திய அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. இது அரசியலுக்கான தருணம் அல்ல. இது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான நேரம். மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்" என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

வயநாடு நிலச்சரிவு: முன்னதாக, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 73 பேர் உயிரிழந்ததாகவும், பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

400 குடும்பங்கள் தவிப்பு: நிலச்சரிவால் வயநாட்டின் சூரல்மலா பகுதியில் மட்டும் 400 குடும்பங்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அட்டமலா - முண்டக்கையை இணைக்கும் ஒரே பாலம் வெள்ளம், நிலச்சரிவில் சேதமடைந்த நிலையில் மீட்புப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் காயமடைந்தோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. பல நூறு வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிகிறது. அட்டமலா, நூல்புழா, முண்டக்கை, அட்டமலா பகுதிகள் பெரும் பாதிப்புகளை சந்தித்தப் பகுதிகளாக உள்ளன. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. | விரிவாக வாசிக்க > வயநாடு நிலச்சரிவில் 64 பேர் பலி; பலர் மாயம் - மீட்புப் பணிகளுக்கு விரைந்தது கடற்படை குழு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x