Published : 30 Jul 2024 02:35 PM
Last Updated : 30 Jul 2024 02:35 PM

வயநாடு: பாறையை பிடித்து தப்பிக்க முயன்றவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட துயரம்!

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட கிராமத்தில், வேகமாகப் பாயும் வெள்ளத்துக்கு மத்தியில் சேற்றில் மூழ்கிய நிலையில் ஒரு பெரிய பாறையை பிடித்துக் கொண்டு ஒரு நபர் உயிருக்குப் போராடும் காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது. அவரைக் காப்பாற்றும் முயற்சி தீவிரமாக நடந்து வந்தது. ஆனால், அவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட அந்த நபர், பெரிய பாறைகளுக்கு இடையில் சிக்கி உயிர் பிழைத்தார். எனினும், நிலச்சரிவினால் ஏற்பட்ட சேறுகளில் சிக்கி அவரால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. எனினும், தொடர்ந்து எழுந்து நிற்க முயற்சித்து உயிர் பிழைக்க சிரமப்பட்டார். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாறைகளுக்கு மத்தியில் அந்த நபர் உயிர் பிழைக்க எடுத்த முயற்சியின் வேதனையான காட்சிகள், நிலச்சரிவில் சிக்கிய முண்டக்கை டவுன் பகுதியில் இருந்து வெளியானது.

முண்டக்கை டவுன் பகுதியில் செவ்வாய்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 7.30 மணியளவில் அப்பகுதியின் பஞ்சாயத்து உறுப்பினர் ராகவன் கண்ணில் உயிருக்கு போராடிய அந்த நபர் சிக்க, இந்த துயரமான சம்பவம் வெளிவந்துள்ளது. ஆற்றில் ஒரு பக்கம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, மறுபக்கத்தில் நிலச்சரிவால் அடித்துச் செல்லப்பட்ட பாறைகளுக்கு மத்தியில் ஒரு கால் மண்சரிவில் சிக்கியுள்ள அந்த நபரை யாரும் அணுக முடியவில்லை. அவரது அவல நிலை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நிலையில், மீட்புக் குழுக்கள் அவரை மீட்க விரைந்தன. ஆனால், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அந்த நபரை மீட்க முடியாமல் போனது.

வயநாடு நிலச்சரிவு: முன்னதாக, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 64 பேர் உயிரிழந்ததாகவும், பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் இன்றும் (ஜூலை 30) கேரளாவின் வயநாடு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

400 குடும்பங்கள் தவிப்பு: நிலச்சரிவால் சூரல்மலா பகுதியில் மட்டும் 400 குடும்பங்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அட்டமலா - முண்டக்கையை இணைக்கும் ஒரே பாலம் வெள்ளம், நிலச்சரிவில் சேதமடைந்த நிலையில் மீட்புப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் காயமடைந்தோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. பல நூறு வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிகிறது. அட்டமலா, நூல்புழா, முண்டக்கை, அட்டமலா பகுதிகள் பெரும் பாதிப்புகளை சந்தித்தப் பகுதிகளாக உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x