Last Updated : 30 Jul, 2024 01:12 PM

 

Published : 30 Jul 2024 01:12 PM
Last Updated : 30 Jul 2024 01:12 PM

மத்திய அமைச்சர் குமாரசாமியின் மூக்கில் ரத்தம் வடிந்ததால் பரபரப்பு

செய்தியாளர் சந்திப்பின் போது குமாரசாமியின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது

பெங்களூரு: பெங்களூருவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது மத்திய அமைச்சர் குமாரசாமியின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியள‌வில் மத்திய அமைச்சர் குமாரசாமியும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது குமாரசாமி பேசுகையில், திடீரென அவரது மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது. உடனடியாக அவர் சிறிய துணியால் மூக்கை மூடிய போதும், ரத்தம் தொடர்ச்சியாக கொட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த குமாரசாமியின் மகன் நிகில் உடனடியாக அவரை ஜெயநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குமாரசாமியின் மைத்துனரும் பாஜக எம்பியுமான மருத்துவர் மஞ்சுநாத் சிகிச்சை அளித்தார்.

இதுகுறித்து மருத்துவர் மஞ்சுநாத் எம்பி கூறுகையில், “குமாரசாமி நலமாக இருக்கிறார். அஞ்சும் வகையில் எந்த பிரச்சினையும் இல்லை. அவருக்கு இதய நோய் இருப்பதால் ரத்தத்தின் திடத்தன்மையை குறைக்கும் வகையில் மாத்திரை (Blood Thinner) எடுத்து கொள்கிறார். இதனால் ரத்தம் கசிந்து இருக்கலாம்” என்றார்.

அதேவேளையில் 3 மணி நேர சிகிச்சைக்கு பின்னர் ஞாயிறு நள்ளிரவில் குமாரசாமி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பினார். மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோர் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x