Published : 30 Jul 2024 10:01 AM
Last Updated : 30 Jul 2024 10:01 AM

வயநாடு நிலச்சரிவில் 89 பேர் பலி; பலர் மாயம் - மீட்புப் பணிகளுக்கு விரைந்தது கடற்படை குழு

புதுடெல்லி: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு 89 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், பாலம் சேதம் அடைந்துள்ளதாலும் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் 100-க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கித் தவிப்பதாகத் தெரிகிறது. அதேபோல் சூரல்மலா பகுதியில் பலரது நிலை என்னவானது என்று தெரியாத சூழலே நிலவுகிறது. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 949790 0402, 0471 2721566 ஆகிய உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மீட்புப் பணியில் கடற்படை: ஏற்கெனவே மீட்புப் பணியில் தீயணைப்பு துறை, காவல்துறை, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவம் உள்ளிட்ட பிரிவுகள் ஈடுபட்டுள்ள நிலையில் கடற்படையைச் சேர்ந்த 50 பேர் கொண்ட குழு வயநாடு விரைகிறது.

வயநாடு விரையும் ராகுல், பிரியங்கா: நிலைமை நிமிடத்துக்கு நிமிடம் மோசமடைந்துவரும் சூழலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் வயநாடுக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட உள்ளனர்.

ரூ.5 கோடி நிவாரண நிதி: வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழகத்தில் இருந்து இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான கீ.சு.சமீரன், மற்றும் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் தலைமையில் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்பிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கென கேரள அரசுக்கு தமிழக அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாயினை வழங்கிடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

300 மில்லி மீட்டர் அளவு: வயநாட்டில் ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினை தொடர்ந்தே இந்த பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் இன்றும் (ஜூலை 30) கேரளாவின் வயநாடு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 89 பேர் உயிரிழந்ததாகவும், பலர் மாயமாகியுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

400 குடும்பங்கள் தவிப்பு: நிலச்சரிவால் சூரல்மலா பகுதியில் மட்டும் 400 குடும்பங்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அட்டமலா - முண்டக்கையை இணைக்கும் ஒரே பாலம் வெள்ளம், நிலச்சரிவில் சேதமடைந்த நிலையில் மீட்புப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் காயமடைந்தோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. பல நூறு வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு மீட்பு, நிவாரணப் பணிகளில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த பிரதமர்: முன்னதாக இது தொடர்பாக பிரதமர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பதிவில், “வயநாடு நிலச்சரிவு குறித்து அறிந்து துயரடைந்தேன். தங்களின் அன்புக்குரியவர்கள் இழந்து வாடுவோருக்கு ஆறுதலை உரித்தாக்குகிறேன். காயமடைந்தோர் விரைவில் குணம் பெற பிரார்த்தனைகள். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறன. இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனை தொடர்புகொண்டு பேசினேன். தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதியளித்துள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமரின் நிவாரணத் தொகையில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ராகுல் காந்தி கவலை: இதேபோல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “வயநாடு மாவட்டம் மேப்பாடியில் ஏற்பட்ட நிலச்சரிவு செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என நான் நம்புகிறேன்.

கேரள முதல்வருடனும், வயநாடு மாவட்ட ஆட்சியருடனும் பேசியுள்ளேன். அனைத்து அமைப்புகளுடனும் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிடுமாறு வேண்டியுள்ளேன். மத்திய அமைச்சர்களுடன் பேசி வயநாடுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வலியுறுத்துவேன். ஐக்கிய ஜனநாயக முன்னணி தொண்டர்கள் மீட்பு, நிவாரணப் பணிகளில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு, ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்ற நிலையில் வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்தார். அங்கு அடுத்து நடைபெறும் இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி களமிறக்கப்படுவார் எனத் தெரிகிறது. இந்நிலையில், ராஜினாமா செய்திருந்தாலும் ராகுல் வயநாடு நிலச்சரிவு குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x