Published : 30 Jul 2024 08:48 AM
Last Updated : 30 Jul 2024 08:48 AM
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் செராய்கேலா மாவட்டத்தில் இன்று (ஜூலை 30) அதிகாலை மும்பை நோக்கிச் சென்ற மும்பை - ஹவுரா பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் புரட்டிப் போடப்பட்டன. இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்ததாகவும் 20 பேர் காயம் அடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து குறித்து தென்கிழக்கு ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இன்று அதிகாலை 3.45 மணியளவில் விபத்து நடந்துள்ளது. மும்பை - ஹவுரா ரயில் (ரயில் எண் 12810) சக்ரதர்பூர் அருகே தடம்புரண்டது. இதில் மும்பை - ஹவுரா மெயிலின் 10 முதல் 12 ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. 2 பேர் இறந்தனர். 20 பயணிகள் காயமடைந்துள்ளனர். சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுவர்களுக்கு நிகழ்விடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சை தேவைப்படுவர்களுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.” என்றார்.
உதவி எண்கள் அறிவிப்பு: ரயில் விபத்தை ஒட்டி ரயில்வே துறை உதவி எண்களை அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு:
இந்த விபத்து காரணமாக இந்த மார்க்கத்தில் செல்லும் ஹவுரா - இஸ்பாட் எக்ஸ்பிரஸ் ரயில் (22861), காரக்பூர் - தன்பாத் எக்ஸ்பிரஸ், ஹவுரா - பார்பில் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சவுத் பிஹார் எக்ஸ்பிரஸ் (13288) மாற்றுப் பாதையில் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அசன்சோல் டாடா மெமும் சிறப்பு ரயில் (08173) ஆத்ரா வரை மட்டுமே செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 19 ஆம் தேதி (ஜூலை 19) சண்டிகரில் இருந்து அசாம் மாநிலத்தின் திப்ருகர் நகர் வரை செல்லும் சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சின் 8 பெட்டிகள், உத்தரப் பிரதேசத்தின் ஜுலாஹி ரயில் நிலையத்துக்கு சில கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்பு உள்ள பிகவுரா என்ற இடத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்தத் துயரம் விலகுவதற்குள் ஜார்க்கண்டில் பயணிகள் ரயில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT