Published : 30 Jul 2024 07:49 AM
Last Updated : 30 Jul 2024 07:49 AM
வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 7 பேர் உயிரிழந்ததாகவும், பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வயநாடு - முண்டக்காய் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை கனமழையை தொடர்ந்து 2 மணியளவில் முதலில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகாலை 4 மணி அளவில் சூரல்மலா பகுதியில் உள்ள பள்ளியில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த பள்ளிக்கூடம் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கும் முகாமாக இருந்துள்ளது. பள்ளியின் அருகே அமைந்துள்ள வீடுகள், வாகனங்கள் மற்றும் கடைகள் நீரில் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதிக்கு சென்று வருவதற்கான பாலம் இடிந்து சேதமடைந்துள்ளது. அதனால் சுமார் 400 குடும்பங்கள் வெளியேற முடியாமல் அங்கு சிக்கி உள்ளதாக தெரிகிறது.
போலீஸார், தீயணைப்பு படையினர், வனத் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் பேர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராணுவமும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.
கனமழை மற்றும் சாலைகள் சேதம் போன்ற காரணத்தால் மீட்பு பணியில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாலைகளை விரைந்து சீர் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் ஒரு வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக பெரும்பாலான இடங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment