Published : 30 Jul 2024 05:34 AM
Last Updated : 30 Jul 2024 05:34 AM

மகாராஷ்டிர மாநில காட்டில் கட்டிப் போடப்பட்டிருந்த பெண் மீட்பு: தமிழ்நாட்டு முகவரியுள்ள ஆதார் கண்டெடுப்பு

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் சிந்த்துர்க் மாவட்டம் ஓரோஸ் அருகில் சாவந்த்வாடி வனப்பகுதி உள்ளது. இங்குள்ள சோனுர்லி கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்ப்பவர்கள் கடந்தசனிக்கிழமை சாவந்த்வாடி வனப்பகுதிக்குள் சென்றனர். அப்போது ஒரு பெண்ணின் கூக்குரல் சத்தத்தைக் கேட்ட அவர்கள் அங்கு சென்றனர்.

அப்போது அங்கு 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், இரும்பு சங்கிலியால் கட்டிப் போடப்பட்டிருப்பதைக் கண்டு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து போலீஸ் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “இரும்புச் சங்கிலியால் கட்டிப் போடப்பட்டிருந்த பெண்ணை மீட்டோம். அவரிடமிருந்து தமிழ்நாட்டு முகவரியுடன் கூடிய ஆதார்அட்டை, அமெரிக்க பாஸ்போர்ட் நகல் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அவருக்கு உளவியல்ரீதியான பிரச்சினை இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் அவரிடமிருந்து மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துச் சீட்டுகளும் கிடைத்தன.

அவரது பெயர் லலிதா காயி என்பது தெரியவந்தது. மேலும் அவரது விசா காலமும் முடிவடைந்துள்ளது. இதுதொடர்பாக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகத்தில் இருந்து விவரங்களைச் சேகரித்து வருகிறோம்.

போலீஸாருக்குக் கிடைத்த தகவலின்படி அவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில்தான் இருக்கிறார்.

அவர் தற்போது போலீஸாரிடம் வாக்குமூலம் தரும் நிலையில் இல்லை. கடந்த சில நாட்களாக அவர் சாப்பிடவில்லை என்று தெரிகிறது. மேலும் அவரை மரத்தில் கட்டிப் போட்டிருந்த பகுதியில் அதிக மழை பெய்துள்ளது. இதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவர் எத்தனை நாளாக மரத்தில் கட்டப்பட்டுக் கிடந்தார், யார் அவரைக் கட்டி வைத்தனர் என்பது தெரியவில்லை. அவரது கணவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. அவர்தான் அவரைக் கட்டி வைத்துவிட்டு தப்பியோடியிருக்கலாம் என நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

இதுதொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x