Published : 29 Jul 2024 12:12 PM
Last Updated : 29 Jul 2024 12:12 PM

மதுபான கொள்கை ஊழல்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. இதன்படி, 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தனர். இதே ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ தனியாக வழக்கு பதிவு செய்து கேஜ்ரிவாலை கைது செய்தது. அமலாக்கத் துறை வழக்கில் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், சிபிஐ கைது காரணமாக தொடர்ந்து சிறையில் இருக்கிறார்.

இந்த நிலையில் தான் மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் பலர் மீது டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சிபிஐ தனது விசாரணைகளை முடித்த நிலையில், தற்போது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

முன்னதாக, மதுபான கொள்கை வழக்கில் கேஜ்ரிவால் ‘முதன்மையான குற்றவாளி’ என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் “ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் ஊடகப் பொறுப்பாளரும், கே கேஜ்ரிவாலின் நெருங்கிய கூட்டாளியுமான விஜய் நாயர் பல மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

மதுபானக் கொள்கை தொடர்பான மணீஷ் சிசோடியாவின் முடிவுகளுக்கு கேஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்பட்டது. எந்த காரணமும் இல்லாமல் மொத்த மது விற்பனையாளர்களின் லாப வரம்பு 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இப்படி, மதுபான ஊழலில் அரவிந்த் கேஜ்ரிவால் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்துளளர். டெல்லி அரசின் அனைத்து முடிவுகளும் அவரது வழிகாட்டுதலின்படி மட்டுமே எடுக்கப்பட்டன” என்று நீதிமன்ற விசாரணையில் சிபிஐ இதற்கு முன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x