Published : 29 Jul 2024 11:12 AM
Last Updated : 29 Jul 2024 11:12 AM

அரசியல் கட்சியாக மாறும் ஜன சுராஜ்: பிஹார் தேர்தலில் போட்டி என பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

பாட்னா: தனது ‘ஜன சுராஜ்’ அமைப்பு அரசியல் கட்சியாக அடுத்த வருடம் பிஹார் தேர்தலில் போட்டியிடும் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தேர்தல் திட்டமிடுதலுக்கு புகழ்பெற்ற ஐ-பேக் என்ற அமைப்பின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர். பாஜக, ஆம் ஆத்மி, திமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளுக்காக அவர் பணியாற்றினார். 2021ல் நடந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் திமுக மற்றும் திரிணமூல் காங்கிரஸுக்காக பிரஷாந்த் கிஷோர் பிரச்சார வியூகம் அமைத்தார். அத்தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகிய அவர், பிஹாரில் ‘ஜன சுராஜ்’ என்கிற அமைப்பை தொடங்கி பாத யாத்திரை மேற்கொண்டார்.

இதற்கிடையே, தனது 'ஜன சுராஜ்' அமைப்பு காந்தி ஜெயந்தி தினத்தில் அரசியல் கட்சியாக மாறும் என்று அறிவித்துள்ளார். மேலும், அடுத்த வருடம் பிஹார் சட்டப்பேரவை தேர்தல் தனது கட்சி போட்டியிடும் என்று ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் அறிவித்தார். கூட்டத்தில், “கட்சியை யார் வழிநடத்துவது போன்ற மற்ற விவரங்கள், உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்” என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

ஜன சுராஜ் அமைப்பில் பிஹாரின் முக்கிய அரசியல்வாதிகள் சிலர் சமீபத்தில் இணைந்தனர். பிஹார் முன்னாள் அமைச்சர் மோனாசிர் ஹசன், ராஷ்டிரிய ஜனதா தள முன்னாள் எம்எல்சி ராம்பாலி சிங் சந்திரவன்ஷி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆனந்த் மிஸ்ரா, ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்பி மங்கனி லால் மண்டலின் மகள் பிரியங்கா ஆகியோர் சமீபத்தில் ஜன சுராஜில் இணைந்தனர்.

தொடர்ந்து பலர் இணைந்து வரும் நிலையில் தான் அக்டோபர் 2ல் தனது ஜன சுராஜ் அமைப்பு அரசியல் கட்சியாக அறிவிக்கப்படும் என்று பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x