Published : 28 Jul 2024 07:09 PM
Last Updated : 28 Jul 2024 07:09 PM

‘‘கடந்த ஆண்டும் நூலகம் வெள்ளத்தில் மூழ்கியது’’: டெல்லி பயிற்சி மைய மாணவர்கள் உருக்கம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை பொழிந்த கனமழையில், அங்குள்ள பிரபல தனியார் யுபிஎஸ்சி பயிற்சி மையத்தின் கீழ்த்தளத்தில் (பேஸ்மெண்ட்) வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி மாணவிகள், ஒரு மாணவர் என மொத்தம் மூவர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஸ்ரேயா யாதவ், தெலுங்கானாவைச் சேர்ந்த தன்யா சோனி, கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த நவீன் டால்வின் ஆகியோர் உயிரிழந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

சனிக்கிழமை மாலை டெல்லியில் பரவலாக மழை பதிவானது. இந்த சூழலில் 7 மணி அளவில் டெல்லி தீயணைப்பு துறைக்கு மத்திய டெல்லியின் பழைய ராஜிந்தர் நகர் பகுதியில் அமைந்துள்ள யுபிஎஸ்சி பயிற்சி மையத்தில் நீர் தேங்கியது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்துள்ளனர். அங்கு அவர்கள் சென்ற போது தரைக்கு கீழே உள்ள தளம் முழுவதும் நீரால் நிரம்பி காணப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு தேசிய பேரிடர் மீட்பு படையினரும் உள்ளூர் காவல் துறையினரும் வந்தனர். அவர்கள் மேற்கொண்ட மீட்பு பணியில் நீரில் மூழ்கி உயிரிழந்த மூவரின் உடல்கள் மீட்கப்பட்டன.

தரைத்தளத்தில் நூலகம் இருந்துள்ளது. அங்கு மூவரும் படித்துக் கொண்டிருந்தபோது தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தரைத்தளத்தில் மழைநீர் புகுவது இது முதல்முறையல்ல என்கின்றனர் அங்குள்ள மாணவர்கள். கடந்த ஆண்டும் பருவமழையின்போது இதேபோல் நூலகத்தில் வெள்ளநீர் புகுந்தது என்றும், எனினும், இந்த அளவுக்கு கடந்த ஆண்டு நிலைமை மோசமடையவில்லை என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

"கடந்த ஆண்டும், நூலகம் வெள்ளத்தில் மூழ்கியது. ஆனால் தண்ணீர் கணுக்கால் அளவுக்கு மட்டுமே இருந்தது. முன்னெச்சரிக்கையாக, நூலகம் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டது” என்று மனோஜ் என்கிற மாணவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, சில நாட்களுக்கு முன்பு, தண்ணீர் வராமல் இருக்க பயிற்சி மைய கட்டிடத்தின் பிரதான கதவு பழுது பார்க்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்படி இருந்தும் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் மாணவர்களின் உயிரிழப்பு நீதி கேட்டு பயிற்சி மையத்தின் சக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x