Published : 28 Jul 2024 06:19 PM
Last Updated : 28 Jul 2024 06:19 PM
சென்னை: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்குக்கு, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
நாடு முழுவதிலுமிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் முன்னணி மருத்துவ பிரபலங்கள், வல்லுநர்கள், மருத்துவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கிற்கு நீரிழிவு மருத்துவம், நீரிழிவு பராமரிப்பு, நீரிழிவு ஆராய்ச்சி ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டதற்காக மதிப்புமிக்க "வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கப்பட்டது.
டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம், சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றின் தலைவர் டாக்டர் வி.மோகன் அமைச்சரைப் பாராட்டி உரை நிகழ்த்தினார். இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆசிரியர், பேராசிரியர், ஆராய்ச்சியாளர், நீரிழிவு நோயியல் நிபுணர் என பன்முகத் தன்மையுடன் உயர்ந்து தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
டாக்டர் ஜிதேந்திர சிங், தேசிய அளவில் அறியப்பட்ட மருத்துவ நிபுணராகவும் திகழ்கிறார். மக்களவைக்கு தொடர்ச்சியாக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சரவையில் 3-வது முறையாக பதவி வகிக்கிறார்.
விழாவின் போது டாக்டர் ஜிதேந்திர சிங்கிற்கு வழங்கப்பட்ட பாராட்டுப் பத்திரத்தில், அவர் ஒரு பல்துறை ஆளுமை என்றும், சிறந்த கல்வியாளர், ஆராய்ச்சியாளர், மருத்துவ ஆசிரியர், எழுத்தாளர், சிறந்த சொற்பொழிவாளர் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோயின் பல்வேறு அம்சங்கள் குறித்து எட்டு புத்தகங்களை டாக்டர் ஜிதேந்திர சிங் எழுதியிருப்பதும் அந்த பாராட்டுப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் சிறந்த பங்களிப்பு குறித்தும், நாடாளுமன்றத்தில் அவரது சிறந்த செயல்பாடுகள் குறித்தும் பாராட்டுப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசில் தமது பொறுப்பின் கீழ் உள்ள பல்வேறு துறைகள், அமைச்சகங்களை டாக்டர் ஜிதேந்திர சிங் சிறப்பாகக் கையாள்வதும் பாராட்டப்பட்டது. அவரது கடின உழைப்பு, எளிமையான அணுகுமுறை ஆகியவை சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருப்பதாகப் பாராட்டுப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்ட உடனேயே, "வாழ்நாள் சாதனையாளர் விருது" க்கான தங்கப் பதக்கம் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் கழுத்தில் அணிவிக்கப்பட்டது. அப்போது, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி, பல நிமிடங்களுக்கு கைதட்டினர். டாக்டர் ஜிதேந்திர சிங் சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்று நிகழ்ச்சியை நடத்திய தொகுப்பாளர் அறிவித்தபோது பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தமது ஏற்புரையில் இந்த விருது தமக்கு மிகப் பெரிய கௌரவம் என்றும், மிகுந்த அடக்கத்துடனும் பணிவுடனும் இந்த விருதை ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார். ஏறக்குறைய 40 ஆண்டு காலப் பயணத்தில், நாட்டின் மிக உயர்ந்த மருத்துவ நிபுணர்களை சந்தித்து, புகழ்பெற்றவர்களுடன் பணியாற்றி இருப்பது ஒரு தெய்வீக ஆசீர்வாதம் என்று அவர் கூறினார். தமக்கு வழங்கப்பட்டுள்ள இந்த கௌரவத்திற்கு ஏற்ப சிறந்த முறையில் தொடர்ந்து தாம் பணியாற்ற இருப்பதாக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT