Published : 27 Jul 2024 06:59 PM
Last Updated : 27 Jul 2024 06:59 PM

‘‘அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே நாடாளுமன்றத்தின் முதன்மை பணி’’ - ஜக்தீப் தன்கர்

புதுடெல்லி: அரசியலமைப்பைப் பாதுகாப்பதும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதுமே நாடாளுமன்றத்தின் முதன்மையான பணி என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்காக நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தாக்க நிகழ்ச்சியில் ஜக்தீப் தன்கர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், "நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகத்தின் தீவிர பாதுகாவலர்கள். நாடாளுமன்றத்தில், கவனத்தை ஈர்ப்பதற்காக மட்டுமே பேசுவது, பின்னர் வெளியேறுவது போன்ற செயல்கள் மிகுந்த கவலையை அளிக்கின்றன. பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக தனிநபர் தாக்குதல்களை நடத்தும் போக்கு உறுப்பினர்களிடையே அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

அவசர நிலை, இந்திய ஜனநாயகத்தில் வலி மிகுந்த, இதயத்தை நொறுக்கும் இருண்ட அத்தியாயம். அந்த நேரத்தில் நமது அரசியலமைப்பு வெறும் காகிதமாக சுருங்கி, அடிப்படை உரிமைகள் கடுமையாக மீறப்பட்டு, தலைவர்கள் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டனர். நாடாளுமன்றத்தின் ஒட்டுமொத்த செயல்பாடு பெருமிதம் அளிக்கிறது. நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆரம்பத்திலிருந்தே மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். அவசர நிலைக் காலம் தவிர பிற காலங்களில் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்.

குறுகிய அரசியல் கண்ணோட்டத்திலிருந்து தேசியவாதத்துக்கும் நாட்டு நலனில் அக்கறை கொண்ட பார்வைக்கும் மாற வேண்டும். அவையில் பேசும் உறுப்பினருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள நாடாளுமன்ற சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது. அரசியலமைப்பைப் பாதுகாப்பதும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதுமே நாடாளுமன்றத்தின் முதன்மையான பணி. இதற்காகத்தான் உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 60 ஆண்டுகளில் முதன்முறையாக ஒரு பிரதமர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவி வகித்து வருகிறார். கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அவையின் தலைவர் என்ற முறையில் பிரதமரின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. மாநிலங்களவையில் சமீபத்தில் ஏற்பட்ட இடையூறுகள் கவலை அளிக்கின்றன. அவையில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நான் உறுதியாக நிராகரிக்கிறேன். அடிப்படைக் கொள்கைகள் குறித்து அனைத்து உறுப்பினர்களும் சிந்திக்க வேண்டும். நாடாளுமன்ற நடவடிக்கைகளின் கண்ணியத்தை பராமரிக்க வேண்டும்.

ஜனநாயகத்தின் அடிப்படை தூண்களான நிர்வாகம், நீதித்துறை, சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவை பலவீனமடைவது இறுதியில் சாதாரண குடிமகனை பாதிக்கும். சபையில் கண்ணியமான, ஆக்கபூர்வமான விவாதங்கள், உரையாடல்கள் நடைபெற வேண்டும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x