Published : 27 Jul 2024 03:51 PM
Last Updated : 27 Jul 2024 03:51 PM

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்: காரணம் என்ன?

நிதிஷ் குமார் | கோப்புப்படம்

புதுடெல்லி: புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டதில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவருக்குப் பதிலாக பிஹார் மாநிலத்தின் சார்பில், துணை முதல்வர்களான சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா கலந்து கொண்டனர்.

முக்கியமான கூட்டத்தில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொள்ளாதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. என்றாலும், முதல்வர் நிதிஷ் குமார் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் இருப்பது இது முதல் முறை இல்லை. இதற்கு முன்பு அவர் இதுபோன்ற கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்துள்ளார் அப்போதெல்லாம் பிஹாரின் துணை முதல்வர் கலந்து கொண்டுள்ளார். இந்த முறையும் மாநிலத்தின் இரண்டு துணை முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் பிஹாரைச் சேர்ந்த நான்கு மத்திய அமைச்சர்கள் நிதி ஆயோக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்” என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி முதல்வர்கள் புறக்கணிப்பு: இந்த நிதி ஆயோக் கூட்டத்தின் பாஜக இல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர். திமுக ஆளும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், என்ஆர் காங்கிரஸ் ஆளும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சிபிஎம் கட்சி ஆளும் கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடக முதல்வர் சித்தராமையா, இமாச்சலப் பிரதேசத்தின் சுவிந்தர் சிங் சுகு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருந்தனர்.

கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறிய மம்தா: எதிர்க்கட்சிகள் கூட்டணியைச் சேர்ந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் இன்றயை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றார். என்றாலும் அவரும், நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே தன்னால் பேச முடிந்தது என்றும் பிறகு தனது மைக் ஆஃப் செய்யப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்து, மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம் சாட்டி கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்தார். மேலும் வாசிக்க >> நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மம்தா வெளிநடப்பு; பேச நேரம் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x