Published : 27 Jul 2024 03:02 PM
Last Updated : 27 Jul 2024 03:02 PM
சம்பாஜிநகர் (மகாராஷ்டிரா): ‘ஊழல்வாதிகளின் தலைவன்’ என்று தன்னை அழைத்த அமித் ஷாவுக்கு ‘குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர் நீங்கள்’ என்று பதிலடி கொடுத்துள்ளார் சரத் பவார். மேலும், ‘அவர் தற்போதைய உள்துறை அமைச்சர். அவரின் சொந்த மாநிலத்தில் இருந்து விலகி இருக்க உச்ச நீதிமன்றத்தால் எவ்வாறு நிர்பந்திக்கப்பட்டார்?’ என்பதை நினைவு கூர்ந்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மூத்த அரசியல்வாதியும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் (சரத்சந்திர பவார்) தலைவருமான சரத் பவார் கூறுகையில், “சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷா சில விஷயங்களைக் கூறி என் மீது தாக்குதல் தொடுத்திருந்தார். நாட்டிலுள்ள ஊழல்வாதிகளுக்கு எல்லாம் தலைவன் என்று என்னை அழைத்திருந்தார். விநோதமான விஷயம் என்னவென்றால், உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா குஜராத்தில் சட்டத்தை தவறாக பயன்படுத்தியதற்காக அந்த மாநிலத்தில் இருந்து வெளியேறும்படி உச்ச நீதிமன்றத்தால் நிர்பந்திக்கப்பட்டார்.
குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர் இன்று உள்துறை அமைச்சர். எனவே, நாம் எங்கே செல்கிறோம் என்பது பற்றி சிந்திக்க வேண்டும். இந்த நாடு யார் கையில் இருக்கிறதோ அவர்களின் வழியில் தான் மக்கள் வழிநடத்தப்பட்டு தவறான பாதையில் செல்வார்கள், நாம் இது பற்றி சிந்திக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் நாட்டை தவறான பாதையில் எடுத்துச் செல்வார்கள் என்று நான் 100 சதவீதம் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் (அமித் ஷா) கடந்த 2010-ம் ஆண்டு சொராபுதீன் ஷேக் என்கவுன்டர் தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்கு அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். 2014-ம் ஆண்டு அவர் அவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக, ஜூலை 21 -ம் தேதி மகாராஷ்டிராவின் புனேவில் நடந்த பாஜகவின் மாநாட்டில் பேசிய அமித் ஷா, “அவர்கள் (எதிர்க்கட்சியினர்) ஊழல் குறித்து பேசுகிறார்கள். இந்திய அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய ஊழல் மன்னன் சரத் பவார் தான். இதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. இப்போது அவர்கள் எங்களை என்ன குற்றம்சாட்டுவார்கள்? யாராவது ஒருவர் ஊழலை நிறுவனமயமாக்கி இருந்தால் சரத் பவார் அது நீங்கள் தான்” என்று தெரிவித்திருந்தார்.
மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. மாநிலத்தில், ஆளும் கூட்டணியான மகாயுகதியில் பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி சிவ சேனா, சரத் பவாரின் மருமகன், அஜித் பவார் அணி தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகா விகாஷ் அகாதி (எம்விஏ) அணியில், காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்ரே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) ஆகியவை இடம்பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT