Published : 27 Jul 2024 01:15 PM
Last Updated : 27 Jul 2024 01:15 PM
புதுடெல்லி: நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே தன்னால் பேச முடிந்தது என்றும் பிறகு தனது மைக் ஆஃப் செய்யப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம் சாட்டி வெளிநடப்பு செய்தார்.
நிதி ஆயாக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “நிதி ஆயோக் கூட்டத்தில் பேசும்போது, மாநில அரசுகளை மத்திய அரசு பாரபட்சமாக நடத்தக் கூடாது என கூறினேன். தொடர்ந்து பேச விரும்பினேன். ஆனால் 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தார்கள். எனக்கு முன் பேசியவர்கள் 10 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினார்கள்.
எதிர்க்கட்சிகள் தரப்பில் நான் மட்டுமே பங்கேற்றேன். இருந்தும், என்னைப் பேச அனுமதிக்கவில்லை. நான் பேசிக்கொண்டிருந்தபோதே எனது மைக்கை ஆஃப் செய்துவிட்டார்கள். ஏன் என்னை தடுத்தீர்கள், ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள் என்றேன். இந்த கூட்டத்தில் நான் பங்கேற்றதற்காக நீங்கள் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். மாறாக, உங்கள் கட்சிக்கும், உங்கள் அரசாங்கத்திற்குமே அதிக வாய்ப்புகளைக் கொடுக்கிறீர்கள். எதிர்க்கட்சிகள் தரப்பில் நான் மட்டுமே பங்கேற்ற போதும், நீங்கள் என்னை பேசவிடாமல் தடுக்கிறீர்கள். இது வங்கத்தை மட்டுமல்ல, அனைத்து பிராந்திய கட்சிகளையும் அவமதிக்கும் செயலாகும்” என தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 9வது ஆட்சிக்குழு கூட்டம் புதுடெல்லியில் இன்று (ஜூலை 27) தொடங்கியது. இதில், மத்திய அமைச்சரகள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பல்வேறு மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கெண்டனர்.
2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது குறித்து இந்தக் கூட்டம் ஆலோசனை மேற்கொள்கிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வளர்ப்பதையும், திட்டங்களை வழங்குவதற்கான வழிமுறைகளை வலுப்படுத்துவதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிதி ஆயோக்கின் உச்ச அமைப்பான இந்த ஆட்சிக்குழுவில், அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் கவர்னர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் உள்ளனர். பிரதமர் மோடி நிதி ஆயோக்கின் தலைவராக உள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற தலைமைச் செயலாளர்களின் 3-வது தேசிய மாநாட்டில் அரசுக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய மாநாட்டின் போது, ஐந்து முக்கிய தலைப்புகளில் பரிந்துரைகள் வழங்கப்பட்டன. குடிநீர்: அணுகல், அளவு மற்றும் தரம்; மின்சாரம்: தரம், செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை; ஆரோக்கியம்: அணுகல், மலிவு மற்றும் கவனிப்பின் தரம்; பள்ளி: அணுகல் மற்றும் தரம் மற்றும் நிலம்; சொத்து: அணுகல், டிஜிட்டல் மயமாக்கல், பதிவு மற்றும் பிறழ்வு என ஐந்து முக்கிய தலைப்புகளில் பரிந்துரைகள் வழங்கப்பட்டன.
விக்சித் பாரத் 2047 க்கான 10 துறை சார்ந்த கருப்பொருள் பார்வைகளை ஒருங்கிணைக்கும் பணி நிதி ஆயோக்கிடம் கடந்த ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் நல்ல நிர்வாகம் உள்ளிட்ட வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இந்தியாவின் வளர்ச்சி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை நிதி ஆயோக் இலக்காகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT