Published : 27 Jul 2024 12:28 PM
Last Updated : 27 Jul 2024 12:28 PM

அக்னி வீரர்களுக்கு அரசுப் பணியில் இடஒதுக்கீடு: குஜராத், ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்கள் அறிவிப்பு

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு டெல்லி இண்டியா கேட் பகுதியில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்திய அக்னி வீரர்கள்.

புதுடெல்லி: ஓய்வுபெறும் அக்னி வீரர்களுக்கு தங்கள் மாநிலங்களில் அரசு பணியில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என குஜராத், ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்கள் அறிவித்துள்ளன. கார்கில் போரில் பாகிஸ்தானை இந்தியா வென்றதன் 25-வது ஆண்டு விழாவில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராணுவத்தின் முப்படைகளிலும் இளைஞர்களை சேர்க்கும் அக்னி பாதை திட்டம் கடந்த 2022-ல் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களாக பணியில் சேரும் இளைஞர்கள், 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள் என்றும், பிறகு அவர்களில் 75% பேர் தகுதியின் அடிப்படையில் ராணுவத்தில் இணைத்துக் கொள்வார்கள் என்றும், எஞ்சிய 25% பேர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் அக்னி பாதை திட்டத்தை ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்தது. தேர்தலுக்குப் பிறகு மீண்டும் பாஜக தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு எதிர்க்கட்சிகள் அக்னி பாதை திட்டம் ராணுவத்தை வலுவிழக்கச் செய்யும் என்றும், இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் என்றும் குற்றம் சாட்டின.

இந்நிலையில், கார்கில் போரில் பாகிஸ்தானை இந்தியா வென்றதன் 25-வது ஆண்டு விழா நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, ஓய்வுபெறும் அக்னி வீரர்களுக்கு தங்கள் மாநிலங்களில் அரசு பணியில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என பாஜக ஆளும் குஜராத், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய ஆகிய 6 மாநிலங்கள் அறிவித்துள்ளன.

ஆயுதம் தாங்கிய போலீஸ் மற்றும் மாநில ரிசர்வ் போலீஸ் படை ஆட்சேர்ப்பில் அக்னி வீரர்களுக்கு தனது அரசு முன்னுரிமை அளிக்கும் என்று குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார். மாநிலத்தின் சீருடைப் பணிகளில் அக்னி வீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு மற்றும் ஐந்து ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும் என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி அறிவித்துள்ளார்.

நாட்டுக்கு சேவை செய்து திரும்பும் அக்னி வீரர்களுக்கு உத்தரப் பிரதேச காவல் துறை மற்றும் பிஏசி படைகளில் சேர வெயிட்டேஜ் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் வனக் காவலர்களுக்கான ஆட்சேர்ப்புகளில் அக்னிவீரர்களுக்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்துள்ளார். அக்னி வீரர்களுக்கு நிலையான இடஒதுக்கீடு வழங்க தேவையான வழிகாட்டுதல்களை மாநில அரசு விரைவில் வெளியிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநில காவல் துறை மற்றும் ஆயுதப்படை ஆட்சேர்ப்பில் அக்னி வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். அரசுப் பணிகளில் அக்னிவீரர்களுக்கான இடஒதுக்கீட்டை அறிவித்த உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் அருணாசலப் பிரதேசமும் இணைந்துள்ளது. அருணாச்சல பிரதேச இளைஞர்களை அக்னி பாதை திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புக்குத் தயார்படுத்துவதற்கான பயிற்சியை மாநில அரசு அளிக்கும் என்றும், மாநிலத்தின் காவல் துறை, அவசர நிலை மற்றும் தீயணைப்பு சேவைகளுக்கான ஆட்சேர்ப்பின்போது ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் முதல்வர் பெமா காண்டு அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x