Published : 27 Jul 2024 03:46 AM
Last Updated : 27 Jul 2024 03:46 AM

அரசியலைவிட நாட்டின் நலன் முக்கியமானது: கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி 

திராஸ்: கார்கில் வெற்றி தினத்தையொட்டி, காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் ஒருபோதும் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது. அரசியலைவிட நம் நாட்டின் நலன் முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 1999-ம் ஆண்டு தொடக்கத்தில் காஷ்மீரின் லடாக் பிராந்தியம், கார்கில் மலைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் அத்துமீறி ஊடுருவினர். அவர்களது நடமாட்டத்தை அப்பகுதி கிராம மக்கள் கண்காணித்து இந்திய ராணுவத்துக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, 1999 மே முதல் ஜூலை வரை கார்கில் பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவம் இடையே கடும் போர் நடைபெற்றது. இதில் இந்திய ராணுவம் வெற்றிவாகை சூடியது. இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி ‘விஜய் திவஸ்’ என்ற பெயரில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், 25-வது ஆண்டு கார்கில் வெற்றி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, லடாக்கின் திராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி நேற்று மரியாதை செலுத்தினார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

கார்கில் போர் நடந்தபோது, சாமானிய மனிதனாக நானும் இந்திய வீரர்களுடன் இருந்தேன். நமது வீரர்கள் கடினமான சூழலில் வீர தீரத்துடன் போரிட்டதை நேரில் பார்த்தேன். தாய் மண்ணை காக்க உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன்.

கார்கில் போருக்கு முன்பாக பாகிஸ்தானுடன் இந்தியா அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், பாகிஸ்தான் நமது முதுகில் குத்தியது. இந்தியாவுடன் மோதும் ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் தோல்வியை தழுவுகிறது. ஆனாலும் அந்த நாடு இன்னும் பாடம் கற்கவில்லை. இப்போதும் மறைமுகமாக தீவிரவாதிகளுக்கு உதவி செய்து வருகிறது. பாகிஸ்தானின் தீய நோக்கம் ஒருபோதும் வெற்றி பெறாது. நமது வீரர்கள் தீவிரவாதத்தை வேரறுப்பார்கள்.

கார்கில் போரின் வெற்றி எந்த ஒரு அரசுக்கோ, எந்த ஒரு கட்சிக்கோ கிடைத்த வெற்றி அல்ல. இந்த வெற்றி நம் நாட்டுக்கு சொந்தமானது.

அக்னிபாதை திட்டத்தை விமர்சிப்பதா? - நாட்டின் முப்படைகளும் நவீனமயம் ஆக்கப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் ஆயுதங்களை இறக்குமதி செய்தோம். இப்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். முப்படைகளை துடிப்புடனும், போருக்கு தயார் நிலையிலும் வைத்திருக்க அக்னி பாதை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் வலிமை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

ஆனால், சிலர் அரசியல் ஆதாயத்துக்காக இத்திட்டத்தை விமர்சிக்கின்றனர். எல்லையில் பணியாற்றும் வீரர்களுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட்கள் வழங்காதவர்கள், கார்கில் வெற்றி தினத்தை புறக்கணித்தவர்கள் இப்போது அக்னிபாதை திட்டத்தை விமர்சிக்கின்றனர். இத்திட்டம் குறித்து பொய்களை பரப்புகின்றனர்.

ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டம்: முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் பாதுகாப்பு துறையில் பல்லாயிரம் கோடி ஊழல் செய்து, ராணுவத்தை பலவீனப்படுத்தினர். இப்போது முப்படைகளும் நவீனமயம் ஆக்கப்பட்டு வருகிறது. விமானப் படையில் அதிநவீன போர் விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் ஒருபோதும் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது. அரசியலைவிட நம் நாட்டின் நலன் முக்கியமானது. இன்றைய தினம், ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது ராணுவ வீரர்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் மிகுந்த பலன் அளிக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x